விவசாய திணைக்களத்தில் ஊழல் என்பது மனநோயாளிகளின் திட்டமிட்ட செயல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா விவசாய திணைக்களத்தில் அண்மையில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக வெளியிடப்பட்ட கருத்தானது மனநோயாளிகளின் திட்டமிட்ட செயல் என மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபானு தெரிவித்துள்ளார்.

வவுனியா விவசாய பண்ணையில் கற்றாலை செய்கைக்காக கற்றாலை உறிஞ்சிகள் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா விவசாய திணைக்களத்தில் முறைக்கேடுகள் 2018ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தமை தொடர்பாக நான் பொறுப்பெற்றதன் பின்னர் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

இவை தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் தற்போது என்னை ஊழல்வாதியாக சித்திரிக்க முனைகின்றனர்.

கற்றாலை, உறிஞ்சி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கைக்கு என்னால் பதிலளிக்கப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது பெப்ரவரி மாதத்திற்குரிய கணக்காய்வு அறிக்கையாகும். தற்போது அதனை வெளியிட்டிருப்பதானது என்மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்காகவே இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் சில மனநோயாளர்கள் என்னை எவ்வாறெனிலும் தம்மைப்போல் ஊழல்வாதியாக சித்திரிக்க முனைகின்றமை வவுனியா மாவட்டத்தில் விவசாய செய்கையின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதமையின் வெளிப்பாடேயாகும்.

இது தொடர்பில் என்னால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.