கோத்தபாய தொடர்பில் வெளியாகவுள்ள தீர்மானம் மிக்க தீர்ப்பு! பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றம்

Report Print Sujitha Sri in சமூகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் மாலை ஆறு மணியளவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று காலை முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியள்ளது. பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இலங்கையில் வௌிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த அனுமதி பத்திரங்களை ரத்து செய்யும் உத்தரவினை பிறப்பிக்குமாறும், மனு விசாரணை நிறைவடையும் வரை அவற்றை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் கோரியுள்ளனர்.

மேலும், இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வெளியாகவுள்ள குறித்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

அத்துடன், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.