நூல் கொள்வனவு நிதி தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை: எழுத்தாளர்கள் கவலை

Report Print Theesan in சமூகம்

மத்திய கலாசார திணைக்களத்தினால் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்ய வழங்கப்படும் நிதி தொடர்பில் தமக்கு சீரான முறையில் வெளிப்படுத்தவில்லை என வவுனியா எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது ஊடகவியலாளர் இன்று தொடர்பு கொண்டு வினவுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

மத்திய கலாசார திணைக்களத்தினால் எழுத்தாளர் ஊக்குவிப்புக்கான வருடாந்தம் நிதி வழங்கப்படுகின்றது. 25,000 ரூபாய் வீதம் மூன்று எழுத்தாளர்களின் நூல் கொள்வனவுக்கு இந் நிதி வழங்கப்படும்.

எனினும், 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான கொள்வனவு நிதி தொடர்பிலும், அதற்கான விண்ணப்பங்கள் தொடர்பிலும் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

வவுனியா மாவட்ட கலாசார அதிகாரசபை கூட்டத்திலும் சரி. கலாசார பேரவை கூட்டத்திலும் இவ்விடயங்கள் தொடர்பாக அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக மாகாண கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தரொருவரும், ஏனைய இருவருமாக மூவர் குறித்த நிதியை பெற்றுள்ளனர்.

புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்க கலாசார உத்தியோகத்தர் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

இவ் விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தரிடம் வினவிய போது,

எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கான நிதி எமக்கு வழங்கப்படுகின்றது. இம் முறைக்கான நிதியில் 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்கழி மாதத்திற்குள் வெளிவந்த புத்தகங்களை மார்ச் மாதத்திற்குள் எமது திணைக்களத்திற்கு விண்ணப்ப படிவத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

அதனை எமது திணைக்களத்தில் உள்ள குழு குறித்த நூலை கொள்வனவு செய்யலாம் அது பயனுள்ளது என தெரிவித்தால் ஒருவருடைய நூலை 25,000 ரூபாய் வீதம் மூவரின் நூலை கொள்வனவு செய்யலாம். அத்துடன் இலக்கிய விருதும் வழங்கப்படுகின்றது.

எனினும், 2018ஆம் ஆண்டு வெளியிட்ட நூல்களுக்கு இம் முறை எமது மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை.

நூல் கொள்வனவு நிதி அகளங்கள், மைதிலி தயாபரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் வீ. பிரதீபன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. வீ.பிரதீபன் மாகாண கலாசார உத்தியோகத்தர் என்பதால் அவருக்கு வழங்க முடியாது என்பதல்ல.

அவருக்கும் வழங்க கூடியதாக உள்ளது. எனவே, அவருக்கும் கிடைத்துள்ளது. அத்துடன் இந்த நிதி வசதியானவர்களுக்கு வழங்கக் கூடாது கஷ்டப்பட்ட எழுத்தாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரையறை இல்லை.

அத்துடன் நூல் வெளியிட்ட எழுத்தாளர்களிடம் நாம் இது தொடர்பாக தெரிவித்திருந்தோம். அத்துடன் நூல் வெளியிடும் போது எமக்கு அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு எம்மால் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு நாம் விண்ணப்பத்தினை கொடுத்திருந்தோம். அந்த வகையில் அவர்கள் மூவருமே எமக்கு விண்ணப்பத்தினை தந்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...