முல்லைத்தீவு பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வர்த்தமானி மூலம் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய மக்களின் காணிகள் மீள வழங்கப்படுமென வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நாயாறு களப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு பகுதியிலுள்ள காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் ஆளுநர் சுரேன் ராகவனிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதியினை வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆனாலும் அப்பிரதேசத்தினுள் மக்களுடைய தனியார் காணிகளும் வயற்காணிகளும் இருந்தமையினால் தற்பொழுது வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அப்பகுதி மக்களுக்குமிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் கொண்டுவரப்பட்ட மக்களின் காணிகளின் அளவினை இனங்கண்டு அவற்றினை மீளவும் வர்த்தமானி அறிவித்தலின் படி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்விரண்டு களப்பு பகுதிகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடைவிதித்து வருவதாகவும் பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தமை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் துறையினை தொடர்பு கொண்டு களப்பு பகுதி மீன்படி தொடர்பில் ஆய்வு செய்து உடனடியாக வனவிலங்கு திணைக்களத்திற்கு சமர்ப்பித்து நந்திக்கடல் பகுதியில் துப்பரவுப்பணியை மேற்கொள்ளுமாறும் அதற்கு பூரண ஒத்துழைப்பை வனவஜீவராசிகள் திணைக்களம் வழங்கவும், வன ஜீவராசிகள் திணைக்கத்தினால் பொதுமக்களின் காணிகள் விவசாய நிலங்கள் என்பன இதற்குள் அடங்குவதால் அவற்றை மீள் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் உதவியுடன் மக்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்பகுதி மக்கள் காலாகாலமாக செய்துவந்த பாரம்பரிய மீன்பிடிமுறையை செய்யமுடியும் என்றும் இந்த இரு களப்பு பகுதிகளையும் சுத்தம் செய்ய 2018 இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இது வரை எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

Latest Offers