பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக அரசாங்க அதிபர் உட்பட 10 பேருக்கு மகஜர்கள் கையளிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா புதிய கற்பகபுரம் கிராம வட்டாரத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினரின் அத்துமீறிய செயற்பாட்டினை தடுத்து நிறுத்தி தமது கிராமத்திற்கு நீதியான தீர்வினை பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் அரசாங்க அதிபர் உட்பட 10 பேருக்கு மகஜர்களை நேற்று கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தில் உட்கட்டுமான அபிவிருத்திகள், வாழ்வாதார உதவிகள், சன சமூக நிலையம். விளையாட்டுக்கழகம் என்பன செயற்படமுடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீதிப்புனரமைப்பு குடிநீர் போன்ற அத்தியாவசியமான பல்வேறு பிரச்சினைகள் எமது கிராமத்தில் காணப்படுகின்றன.

கிராம அபிவிருத்திச்சங்கம் கடந்த மூன்று வருடங்களாக செயற்பாடமலிருக்கின்றது. அதனைப்புதுப்பித்து தருமாறு பல தடவைகள் அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அக்கோரிக்கைக்கு எவரும் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னின்று செயலாற்றும்போது சிலர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இதனால் கிராமத்திலுள்ள அமைப்புக்களை செயலாற்ற தடை ஏற்படுத்துகின்றனர்.

புதிய கற்பகபுரம் முன்னாள் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட ஏழாம் வட்டார உறுப்பினரின் அடாவடித்தனமான செயற்பாடுகள் இங்கு காணப்படுகின்றன. இதனால் கிராமத்திற்கு வருகின்ற அபிவிருத்தித்திட்டங்கள் இங்கு கிடைப்பதில்லை.

இவ்விடயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கடிதங்கள் மூலமும் எமது பிரச்சினைகளைத் தெரிவித்திருக்கின்றோம்.

இன்று வரையிலும் இப்பிரச்சினைகளுக்கு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தயவு செய்து எம்மக்களுக்கு நீதியான தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகஜரின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதம செயலாளர் வடமாகாணம், மாகாண பிரதம பொதுச்சேவைகள் ஆணைக்குழு வடமாகாணம், செயலாளர் முதலமைச்சரின் அலுவலகம் வடமாகாணம், வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரசேத சபை தலைவர், செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு வடமாகாணம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கொழும்பு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய 10 பேருக்கு மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.