ஞானசார தேரரிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்துடன் தொடர்புடைய தேரரின் உடலை தகனம் செய்த ஞானசார தேரரை கைது செய்ய வலியுறுத்தி யாழில் இன்றையதினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். நகர் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை 10 மணியளவில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்தப் போராட்டத்தின் போது, நீதிமன்ற கட்டளையை அவமதித்த தேரரை கைது செய்யுமாறும், பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியதுடன், இந்து மக்களின் மத வழிபாடுகளை இழிவுபடுத்திய தேரருக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஞானசார தேரரை கைது செய்யத் தவறினால், மீண்டும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகர் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக, சென்று அங்கிருந்து, யாழ். நகர் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

போராட்டத்தின் போது, யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ வீதியை மறித்துப் போராட்டம் செய்ய வேண்டாமென இளைஞர்களை மறித்தவேளை, இளைஞர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரியின் பேச்சைக் கூட கேட்காது, ஞானசார தேரரை கைது செய்ய வலியுறுத்தினர்.

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்ற கட்டளையை மீறி இந்து ஆலயத்திற்கு முன்பாக சடலத்தை தகனம் செய்தது நீதிக்கே விடுத்த சவால்.

சாதாரண நபர் ஒருவர் நீதிமன்ற கட்டளையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொலிஸார் மற்றும் சட்டத்துறையினர், ஏன் ஞானசார தேரரை கைதுசெய்யவில்லை என்றும் இதுவரை ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியதுடன், ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டுமென்று கோசம் எழுப்பினார்கள்.

இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளான ரெலோ மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பொது மக்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...