நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும்

Report Print Navoj in சமூகம்

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டீர்களோ அதுபோன்று எதிர்வரும் காலங்களிலும் நீங்கள் செய்யப்பட வேண்டும். உங்களுக்கான அரசியல் தலைமைகள் பல்வேறு உதவிகளை வழங்குவோம்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பகுதிக்கு ஒரு விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் வருகை தந்தது இதுவே முதல் தடைவையாக இருக்கின்றது.

எமது விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் இருநூறு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விழால்ஓடை பாலமும், நாற்பத்தி ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மூக்கறையான் பாலமும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் நெல் உற்பத்தியில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது பல பாலம் அமைக்கப்பட்டுள்ளமையால் இலங்கையில் நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சின் ஊடக என்ன பங்களிப்பை செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து தருவேன். எதிர்காலத்தில் அனைத்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டவர்களாக, ஒரு தீர்மானம் எடுக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.

இடைநடுவில் சில கருப்பு ஆடுகள் வந்து உங்களை குழப்ப பார்ப்பார்கள். நீங்கள் உங்கள் அபிவிருத்தி விடயத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முப்பது வருட யுத்தங்களின் பின் கஷ்டத்தின் மத்தியில் தங்களது உயிர்களை பாதுகாத்தனர். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் தேவைகளை நிறைவேற்றி தாருங்கள் என்று இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கேட்டுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே யுத்த காலத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து சேவை செய்து வந்தார். முப்பது வருடங்களின் பின்னர் மக்கள் பாலம் தாருங்கள், அது, இது தாருங்கள் என்று கேட்கவில்லை. இந்த நாட்டில் சமாதானத்தினை பெற்றுத் தாருங்கள் என்று கேட்டீர்கள்.

எங்களது பிள்ளைகளையும், எங்களையும் பாhதுகாத்து தாருங்கள் என்று கேட்ட விடயம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முப்பது வருட யுத்தத்தின் பின் பிரதேச அபிவிருத்தி பணிகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது. அதனை அரசாங்கம் விட்டுவிடாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் பிரதமர் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்து பயணங்களை மேற்கொள்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று முயற்சிக்கின்றார்.

வடக்கு கிழக்கில் எனது அமைச்சின் மூலம் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் ஆயிரத்து ஐநூறு கோடிக்கு மேல் பல நிதிகளை ஒதுக்கீடு செய்து மட்டக்களப்பு மவட்டத்தில் தற்போது வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேவைகளை தீர்த்து வழங்க வேண்டும் என்று அடிக்கடி எங்களோடு சன்டை பிடித்துக் கொண்டு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பெண்கள் விடயத்தில் அக்கறையுள்ளவராக இருக்கின்றார். ஏனெனில் பெண்கள் தான் தனக்கு அதிகம் வாக்களிப்பதாக என்னிடம் தெரிவித்தார். இவர் மரணிக்கும் வரை நாடாளுமன்றத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்டத்தையும், இங்கு வாழும் மக்களையும் பற்றி நன்கு உணர்ந்தவர். அவர்களுக்காக பெரும் பாடுபடுபவர். இதேபோன்று இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களாக யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் ஆகியோர் ஒன்றிணைந்து பாரிய பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்துள்ளனர்.

நாங்கள் தற்போது நாற்பத்தி ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மூக்கறையான் பாலத்தினை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஒரு வருடத்தினுள் பாலம் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும்.

இப்பிரதேச மக்கள் பாம்பு தீண்டல், யானை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்வதில் பாரிய கஸ்டங்களை எதிர்கொண்டு உயிர்பலிகளை கொடுத்தாக அறிந்தேன். பாலம் அமைத்ததும் இனி இவ்வாறான பிரச்சனைகள் இடம்பெறாது என நினைக்கின்றேன்.

எமது அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தி திட்டங்களை வகுத்துள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இனிவரும் காலங்களில் யுத்தங்கள் ஏற்படாத வகையில் அனைத்து சமூகத்தினையும் ஒன்றிணைத்து அபிவிருத்தி திட்டங்களை கொண்டு செல்வோம்.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் முடி நரைத்து விட்டது, அவரது ஆயுள் நீண்டகாலம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் திருமணம் செய்யாமல் உள்ளார் யாராவது விண்ணப்பிக்கலாம், ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்ட போது என்னால் தெரிவு செய்ய முடியவில்லை என கூறினார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்விற்கு முன்னர் அவசரமாக திருமணம் செய்து வைத்து மீண்டும் அவரை நாடாளுமன்றம் அனுப்புமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.

Latest Offers

loading...