வவுனியாவில் குடிநீர் கோரி வீதிக்கு இறங்கிய பொதுமக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் குடிநீர் கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் வழங்கப்படும் குடிநீர் திட்டம் கடந்த நான்கு நாட்களாக சீரான முறையில் வழங்கப்படாமையினால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கிக்கு முன்பாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களான குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்ட போதிலும் கடந்த வாரம் குடிநீர் வழங்கும் திட்டம் வேறு நபருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னரே குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

குடிநீர் திட்டம் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டு பின்னர் பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடிநீர் திட்டத்தின் மூலம் வருமானத்தினை பெற்று அதனை பராமரிக்குமாறு அக்கிராமத்திலுள்ள பொது அமைப்பினரிடம் பிரதேச சபையினர் ஒப்படைத்தனர்.

எனவே குடிநீர் வழங்கப்படாமை தொடர்பில் குறித்த அமைப்பினரே பொறுப்பு கூற வேண்டும். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை.

முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் பிரதேசசபையினர் கண்காணிப்பு மேற்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...