நிர்க்கதியாகி நிர்க்கிறேன்! உறவுகளை இழந்த பெண்ணின் நிலை கண்டு கலங்கிய சர்வமதக் குழுவினர்

Report Print Rusath in சமூகம்

யுத்தத்தால் சகோதரியையும், சகோதரனையும் இழந்து எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் நிர்க்கதியாகி கதிகலங்கிப் போய் நிர்க்கிறேன் என கதிரவெளியில் கணவனை இழந்த பெண்ணொருவர் கூறியதைக் கேட்டு தாம் கலங்கிப் போனதாக கதிரவெளிக்கு விஜயம் செய்த சர்வமதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து, இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவ மதத் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மட்டக்களப்பு கதிரவெளிக்கு இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பாளரும், சமாதான செயற்பாட்டாளருமான ரீ.ஜீ. குருகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது சர்வமத செயற்பாட்டாளர்கள் பிரதேச பொதுமக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

இதன்போது சர்வமதக் குழுவினர் முன்னிலையில் தான் கடந்த யுத்த காலம் தொடக்கம் தற்போது வரை எதிர்கொள்ளும் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை கதிரவெளி, புச்சாக்கேணியைச் சேர்ந்த எஸ். சசிகலா கண்ணீர் மல்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனக்கு பெற்றோர்கள் இருவரும் இல்லை.அதேவேளை, எனது சகோதரன் சர்வானந்தன் என்பவர் கடற்றொழில் செய்து கொண்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு அவரது 15வது வயதில் காணாமல் போனார்.

அதேபோல, எனது சகோதரி உமாதேவி என்பவர் பாடசாலைக்குச் சென்றபோது 1997ம் ஆண்டு அவரது 15வது வயதில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.

இன்று வரை அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. இது விடயமாக காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடமும் கடந்த 2016ம் ஆண்டு முன்னிலையாகி சாட்சியமளித்தேன். எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

அதேவேளை, யுத்தத்தால் நான் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநாதையாகவும், கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும் அன்றாடங் கூலி வேலை செய்து எனது இரு பிள்ளைகளையும் கல்வி கற்பிக்கின்றேன்.

ஆயினும் அரசிடமிருந்தோ, அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ எனக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை.

நிர்க்கதியான நிலையில் வாழும் எனக்கு கருணை காட்டுமாறு சர்வமதக் குழுவினருக்கூடாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண்ணினதும், இது போன்று உறவினர்கள் காணாமலாக்கப்பட்டு அநாதரவாகிப்போன குடும்பங்களினதும் நிலை குறித்து தாம் கரிசனை கொண்டுள்ளதாக சர்வமத சமாதானக் குழுவினரும், தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...