கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இன்று நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் டிக்கெட் விநியோகம் செய்யுமாறும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மட்டும் டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் ரமணி கோகிலவாணி மற்றும் சட்டத்தரணிகளான பிரசாந்தி, கேசவன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த 2019.07.22ஆம் திகதி மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்போது, வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என நீதிமன்றம் தீரப்பிட்டது.

அத்துடன் பிள்ளையார் கோயில் கட்டுவதற்கோ, கோபுரம் கட்டுவதற்கோ, விகாரை கட்டுவதற்கோ வழக்கு முடியும் வரை இடமளிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தொல்பொருள் திணைக்கத்தின் ஆணையாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மிகவும் கரிசனையுடன் பார்க்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் விடுக்கப்படும் கட்டளையினை அரசு அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்நிலையில் யாராவது அதில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்படும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை விகாரைக்கோ அல்லது கோயிலுக்கோ, பள்ளிவாசலுக்கு வழிபடுவதற்காக செல்வோரிடம் டிக்கெட் அறவிட முடியாது எனவும், வெந்நீரூற்று கிணற்றை பார்ப்பதற்காக செல்வோருக்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மாத்திரம் டிக்கெட்டுக்களையும் வழங்க முடியும் எனவும் தனிநபர் யாராவது டிக்கெட் வழங்கினால் தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல நேரிடும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி அழைக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.