தற்காலிக கூடாரத்தில் நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை! பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த தோட்ட வைத்தியசாலையில் இருந்து ஹட்டன், டயகம பிரதான வீதி வரை பேரணியாக சென்று வீதியினை மறித்து போடைஸ் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீடமைப்பு திட்டத்தினை உடனடியாக மேற்கொண்டு தருமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் மலையக அரசியல்வாதிகள் எங்கள் வீடமைப்பு திட்டம் தொடர்பில் ஏன் மெளனம் காத்து வருகின்றனர்.

மலையக அரசியல்வாதிகள் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். நாங்கள் பத்து மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றோம்.

மழையுடனான காலநிலை நிலவி வருவதன் காரணமாக நாங்கள் வாழும் கூடாரத்தில் பாம்பு, அட்டை மற்றும் தவளை என்பவற்றின் நடமாட்டம் காணப்படுகிறது.

இதனால் நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது சுமார் இரண்டு மணி நேரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் ஆரப்பாட்டக்காரர்களோடு கலந்துரையாடி அவர்களது தற்காலிக இருப்பிடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் இன்னும் மூன்று வாரங்களில் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - டயகம பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதால் பயணிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...