மருந்து வழங்குனரின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து உயிலங்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு எதிரில் இன்று காலை பொதுமக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டமையினை கண்டித்து அப்பகுதி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வைத்தியம் பெற்று வரும் நிலையில் நிரந்தரமான வைத்தியர் ஒருவர் இல்லை.

இந்த நிலையில் குறித்த சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார். பதில் கடமைக்கு ஒரு மருந்து வழங்குனர் கூட நியமிக்கப்படாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டமையினை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் உடனடியாக உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமான வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்கக் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மக்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு 07 கிலோ மீற்றர் தூரமும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 14 கிலோ மீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

Latest Offers