ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பேரம் பேசுவதற்கு தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க யாழ்.பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் அடிப்படையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றிருக்கின்றது.

இன்று மாலை 4 மணி தொடக்கம் 2 மணி நேரம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது.

இதன்போது ஆக்கபூர்வமான தீா்மானங்களை எட்டியுள்ளதாக கட்சிகள் கூறுகின்றன. இது குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த சகல கட்சிகளும் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை சமர்பித்துள்ளனர். அவை மாணவர் ஒன்றியத்தால் தொகுக்கப்பட்டு தனி ஒரு ஆவணமாக தயாரிக்கப்படும்.

பின்னர் அது சகல கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு அதனடிப்படையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படும் என்றார். தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் கபிலராஜ் கருத்து தெரிவிக்கையில்,

2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றிருக்கின்றது. ஆக்கபூர்வமான வகையில் நம்பிக்கை தரும் அளவுக்கு பேச்சுக்கள் நடந்திருக்கின்றன என கூறினார்.

இதேவேளை அடுத்த சந்திப்பு எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இன்றைய சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, மற்றும் ஈ.பி.ஆா்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இன்றைய சந்திப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.