ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கியது!

Report Print Thirumal Thirumal in சமூகம்

கடந்த இரண்டு வாரமாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தமானது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குழைத்த ஒரு செயலாகும் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் இராதாகிருஷ்ணன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

கடந்த பல வாரங்களாக ரயில்வே திணைக்களம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த செயல்பாடு காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.

தற்பொழுது ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், எந்த நேரத்திலும் இந்த போராட்டத்தை செய்வதற்காக அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசாங்கத்திற்கும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றது.

நாட்டில் தற்பொழுது இந்த நாட்டினுடைய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கின்ற இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இவ்வாறான வேலைநிறுத்தங்கள் எங்களுடைய மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெறாத வண்ணம் அவற்றிற்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும்.

அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுப்படுகின்ற தொழிற்சங்கங்கள் மனிதாபிமான ரீதியாக சிந்தித்து இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது இந்த நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமான விடயமாக அமைந்திருப்பதை நாங்கள் உணர வேண்டும்.

எத்தனை போராட்டங்கள் செய்தாலும், இந்த நாட்டினுடைய அபிவிருத்தி பொதுமக்களின் தேவைகள் இவற்றை மனதில் கொண்டு அணைவரும் போராட்டங்களில் ஈடுப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, எதிர்காலத்தில் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்ற யாராக இருந்தாலும் பொதுமக்களின் கருத்தில் கொண்டு தங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களானால் அது அவர்களுக்கு சிறப்பாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.