முதியோர்களுக்கென்று தனியான இல்லம் இருக்கக் கூடாது! தென்னிந்திய இயக்குநர் அமீர்

Report Print Rusath in சமூகம்

உலகில் முதியோர்களுக்கென்று ஓர் தனியான இல்லம் இருக்கக் கூடாது பெற்றோர் பிள்ளைகளுடன் இருப்பது தான் சரியான வாழக்கையாகும் என தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி - நந்தவனம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தினை ஆலயத்தின் அனுசரணையில் நடத்துவதற்கு உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

வாழ்க்கையில் கொடுமை என்பது வறுமை, வறுமையிலும் வறுமையை விடக் கொடுமை எதுவென்றால் முதுமையில் வறுமை இதுதான் உலகில் இருக்கின்றவற்றில் கொடுமையான விடயமாகும்.

இங்கு முதியோர் இல்லங்களை மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். என்று சொல்கின்றனர் அதற்காக நான் வாழ்த்துக்களை தெரிவிக்கப் போவதில்லை என்னைப் பொறுத்தமட்டில் இந்த உலகில் முதியோர் இல்லம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்று நினைக்கின்றவன் நான்.

முதியோர்களுக்கென்று தனியான ஓர் இல்லம் இருக்கக் கூடாது தாயின் கருவறையில் இருந்து பத்து மாதம் சுமந்து வெளியில் வந்த இங்கு இருக்கக் கூடிய ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை பெற்றெடுத்திருப்பீர்கள். அவர்களை ஆளாக்கி விடுவீர்கள்.

ஆனால், அவர்களுடன் இறுதிவரை இருப்பது என்பது தான் சரியான வாழ்க்கையாக இருக்கும். அதைவிடுத்து தனியான இல்லம் அமைத்து அதில் வாழ்ந்து வருவது தாய், தந்தை உறவை இல்லாமல் செய்வதாக அமைந்து விடும். இதற்காகத் தான் நான் முதியோர் இல்லங்கள் இருக்கக் கூடாது என்ற கருத்தினை கூறியிருந்தேன்.

வெளிநாடுகளில் அவ்வாறு இருக்கின்றார்கள். நாங்கள் இந்த மண்ணில் அவ்வாறான வாழ்க்கையொன்றை வாழ்வது பொருத்தமற்றதாகும்.

ஆனாலும், காலத்தின் கோலம் இதுபோன்ற இல்லங்களை உருவாக்குவதற்கு துணை நிற்கின்றது. இருந்தும் காலம் அமைத்துக் கொடுத்த இவ்வாறான இல்லங்களைப் பராமரிப்பது என்பது பெரிய புண்ணியமாகத் தான் நான் பார்க்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.