இனமுரண்பாட்டை தடுப்பதற்காகவே நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொள்ளவில்லை! முல்லைத்தீவு பொலிஸார்

Report Print Theesan in சமூகம்

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஏற்படவிருந்த இனமுரண்பாட்டை தடுப்பதற்காகவே நீதி மன்ற தீர்ப்பை கவனத்தில் கொள்ளவில்லையென முல்லைத்தீவு பொலிஸார் மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, மற்றும் பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டினை செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும், தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த மாதம் 25ம் திகதி குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணை வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த விசாரணையில் ஆலயத்தின் நிர்வாகம் சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டதரணி ந. அனிஸ் கருத்து தெரிவித்த போது,

குறித்த சம்பவத்தில் நீதிமன்றின் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று எம்மால் தெரிவிக்கபட்டிருந்தது. அதனை பொலிஸ் தரப்பினர் ஏற்று கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் நீதி மன்றின் கட்டளையை அமுல்படுத்துவதை விட இன முரண்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் நீதி மன்ற கட்டளையை மீறியவர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றையதினம் வருகைதந்திருந்த பௌத்த தேரர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக சட்டதரணி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,

குறித்த சம்பவத்தில் மக்கள் மீதான தாக்குதலை தாம் மேற்கொள்ளவில்லை என்றும் தங்களுக்கும் அதற்கும் பொறுப்பல்ல என்பதை பொலிஸார் ஆணிதரமாக தெரிவித்தார்கள்.

எனினும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒளிப்பதிவு காட்சிகளை உங்களுக்கு சமர்ப்பித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என எம்மால் கேட்கப்பட்டது, தகுந்த ஆதாரங்களை வழங்கினால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

அத்துடன் நீதி மன்ற கட்டளையை மீறியதை பொலிஸார் ஏற்று கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் நழுவி செல்லும் போக்கை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த கட்டளையை மீறுவதற்கு பௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் தான் காரணம் எனவும், அவர்களது செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலே குறித்த நீதி மன்றகட்டளை மீறப்பட்டதாகவும் சொன்னார்கள்.

அத்துடன் 12.30 மணிக்கு வழங்கபட்ட ஒரு கட்டளைக்கு அமைவாக ஒரு பத்து நிமிடத்திலே ஏற்கனவே தயார் செய்யபட்டருந்த எரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக அவர்கள் மேற்கொண்டதால் எம்மால் அதனை தடுக்க முடியாமல் போனதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கபட்டது.

எனினும் நாம் அதனை மறுத்ததுடன், காலை 10 மணியளவிலேயே ஞானசாரதேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் சிங்கள மக்களால் எரிப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யபட்டு அது நிறைவேற்றபடுகின்ற கட்டத்தில் தான் நீதிமன்ற தீர்ப்பு வந்ததை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

பொலிஸாரின் பக்க சார்பான நடவடிக்கையினாலே தான் இது நடைபெற்றது. எரிப்பு நடவடிக்கைகளை சிங்கள மக்களும், பௌத்த தேரர்களும் மேற்கொள்ளும் போது காலை 10 மணி தொடக்கம்12.30 மணி வரை பொலிசார் வேடிக்கை பார்த்துகொண்டிருந்ததுடன், அவர்களிற்கு உதவிகளையும் வழங்கியிருந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை முடிவினை எடுக்க கூடாது என்று சொல்லி தடுக்காமல், கைகட்டி நின்ற பொலிசாரின் நடவடிக்கை தொடர்பாக நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் சுட்டிகாட்டினோம். அதனை அவர்கள் ஏற்று கொண்டார்கள்.

இதேவேளை சட்டத்தை மீறியவர்கள் தொடர்பாக நடவடிக்கையினை எடுப்பதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும் சட்டத்தை மீறிய உங்களிற்கு அவர்களை விசாரிப்பதற்கு அருகதையில்லை எனவே வேறு மாவட்டங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் குறித்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் தெரிவித்திருந்தோம் என்றனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர். பிரியதர்சன கருத்து தெரிவிக்கையில்,

நீராவியடி ஆலய விடயம் தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் எமக்கு கிடைக்க பெற்றிருந்தது.

குறிப்பாக ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை எரித்தமை, பொலிசார் பொதுமக்களிற்கு தாக்கியமை, நீதி மன்ற தீர்பை அமுல்படுத்தாமை, போன்ற முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருந்தது.

அது தொடர்பான விசாரணைக்கு இரு தரப்பும் இன்று அழைக்கபட்டனர். விசாரணையின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்தபடாமையை பொலிசார் ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன் பொதுமக்களை பொலிசார் தாக்கியமை தொடர்பாக ஆதாரங்களை சமர்பித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், குறித்த சம்பவத்தில் சட்டவிரோதமாக செயற்பட்டவர்களிற்கு நீதி மன்ற உத்தரவுடன், மேலதிக நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் எமக்கு தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய விசாரணையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையாகி இருந்ததுடன், ஆலயம் சார்பில் சட்டதரணி ந.அனிஸ், ஆலயத்தின் நிர்வாகத்தினரும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.