கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை

Report Print Suman Suman in சமூகம்

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதானமாக கல்லாறு உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கல்லாறுப் பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் மண் அகழ்வதற்கான அனுமதியினை தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது.

ஏற்கனவே குறித்த பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையிலையே தற்போது மண் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளாந்தம் பாவிக்கப்படும் வீதி, பாலம் போன்றன சேதத்திற்கு உள்ளாவதுடன், அருகிலுள்ள குடிநீருடன் உவர் நீர் கலப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இவற்றை கருத்தில் கொண்டு கல்லாறுக் கிராமத்தை பாதுகாத்து தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோத மண் அகழ்விற்காக நாம் போராடி வரும் நிலையில், இவ்வாறான மண் அனுமதியினை வழங்கி இருப்பது எமது கிராமத்தை படுகுழியில் தள்ளும் செயற்பாடாக பார்க்கின்றோம் என பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுவதுடன், அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட மண் அகழ்விற்கான அனுமதியை உடன் நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.