இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறுகோரி உறவினர்கள் கோரிக்கை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 மீனவர்களை விடுதலை செய்யுமாறுகோரி உறவினர்கள் கண்ணீா்மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றிணை விடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எழுவைதீவு, பருத்தித்துறை, மயிலிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த எமது 18 மீனவர்கள் கடந்த மூன்றாம் திகதி இந்தியக் கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி நண்டு பிடிப்பதற்காக தொழிலுக்குச் சென்ற எமது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட நேரம் ஆகியும் கரைக்குத் திரும்பாத நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்களுடன் அருகில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிற மீனவர்கள் எமது குடும்ப உறுப்பினர்களை கப்பல் ஒன்றில் வந்தவர்கள் கூட்டிச் செல்வதாக எம்மிடம் கூறினர்.

இதனைக் கேட்ட நாம் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றோம். அப்போது எமது குடும்பத்தவர்கள் தங்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும், தங்களின் படகுகளை இந்தியாவிற்கு இழுத்துச் செல்வதாக பதற்றத்துடன் கூறினர். அதன் பின்னர் இன்று வரை எம்முடன் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

இந்தியாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். என்று எமக்குத் தெரியாதுள்ளது. எங்கள் குடும்பத்திலுள்ள கணவன், பிள்ளைகள் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது திக்குமுக்காடி வருகின்றோம்.

இவ்வாறான நிலையில் கடற்றொழிலுக்குச் சென்ற எமது குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களையும், படகுகளையும் விடுவிக்க உதவுமாறு யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்ட நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளரிடமும், இந்தியத் துணைத்தூதரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அன்றாடம் கடல் தொழில் செய்து வாழ்ந்து வரும் எங்களின் குடும்ப உறவுகளை விடுவித்து தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.