நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி

Report Print Thileepan Thileepan in சமூகம்
124Shares

முப்பெரும் தேவிகளான சரஸ்வதி, துர்க்கை, இலட்சுமி ஆகியோரை நோக்கி விரதமிருந்து அனுஸ்டிக்கும் நவராத்திரி தினத்தின் இறுதி தினமான விஜயதசமியை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

நவராத்திரி பூசையின் இறுதி நாளே விஜயதசமி ஆகும். இத்தினத்தில் குருமார் மற்றும் பெரியோர்களிடம் கொண்டு சென்று சிறுவர்களுக்கு முதன் முதலாக எழுத்து கற்றுக் கொடுக்கும் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெறுவது வழக்கம்.

அதற்கமைவாக வவுனியாவில் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் குட்செட் கருமாரி அம்மன் ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள், சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் தமிழ் மணி அகளங்கன் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைத்துள்ளனர். இதில் பலரும் வருகை தந்து பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கி வைத்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்ததராஜ குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள்,யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வயதினை ஊடைய பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெருமளவான பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் வித்தியாரம்பத்தில் கலந்துகொண்டனர்.

அம்பாறை

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று நவராத்திரி விழாவின் இறுதி நாளாகிய விஜய தசமி பூசைகள் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பஜனை பாடல்களுடன் ஆரம்பமான வாணி விழா பூஜைகள் சிவசிறி தி. தேவகுமார் ஆச்சாரியாரினால் இந்துசமய மரபுகளுடன் நடார்த்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் நவராத்திரி பூஜை விளக்குமுகமாக கவிதை,நடனம்,பேச்சுப்போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.