வீடுகளை அமைத்து தருமாறு கோரி ஹட்டனில் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - போடைஸ் தோட்டப் பகுதியில் இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி போடைஸ் தோட்ட பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்காலிக குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தமக்கு இதுவரையில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை என தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கோஷங்கள் எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

தாம் வாழ்ந்து வந்த லயன் குடியிருப்புகளில் தீயினால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்தை எட்ட இன்னும் ஒன்றரை மாதங்களே காணப்படும் நிலையில், ஆரம்பத்தில் தமக்கு தனி வீடுகள் அமைத்து தருவதாகவும், அதற்கான காணிகளை பெற்று தருவதாகவும் உறுதி கூறிய தலைவர்களும், அமைச்சர்களும் தம்மை மறந்து விட்டதாக போராட்டக்காரர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

அதேபோல் தற்காலிக கூடாரங்களும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதுடன், கூடாரங்களை கரையான் அரித்து வரும் நிலையில் துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே தமது கோரிக்கைக்கான தீர்வை விரைவில் பெற்றுத்தராவிடின் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கான ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாக போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இரண்டாவது தடவையாகவும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.