வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலின்றி விசனம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் முழுமையாக வற்றியுள்ள நிலையில் இதன் கீழான நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றாக காணப்படும் வன்னேரிக்குளத்தின் கீழ் 346 ஏக்கர் நிலப்பரப்பில் 115 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரச் செய்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை விட, வன்னேரிக்குளத்தினை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்குளத்தின் கீழான நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரத் தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

2019ம் ஆண்டு சிறுபோக செய்கையின் பின்னர் கடந்த மாதங்கள் நிலவிய வறட்சி காரணமாக வன்னேரிக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து குளம் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.

இதனால் குளத்தின் நன்னீர் மீன்பிடி முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதனை அண்டிய கரியாலை, நாகபடுவான் குளம், பல்லவராயன்கட்டுக்குளம் போன்ற குளங்களும் நீர்வற்றிக் காணப்படுகின்றன.

இவ்வாறு வறட்சி காரணமாக குளங்கள் வற்றியுள்ள நிலையில் இதனை நம்பி வாழ்ந்த நன்னீர் மீனவ குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.