வடக்கில் கடத்தல்கள் தொடர்வதாக கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடக்கில் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 963 நாட்களாக சுழற்சி முறையில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போராட்ட தளத்திற்கு முன்னால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குழந்தை பிறந்து 14 நாட்களே ஆன நிலையில் சாப்பாடு வாங்குவதற்காக சென்ற காராத்தே பயிற்றிவிப்பாளரான தனுசன் கடந்த 7ம் திகதி (நேற்று முன்தினம்) கடத்தப்பட்டுள்ளார்.

மனைவியும் 14 வயது குழந்தையும் அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா அரசாங்கமும் மாறி மாறி கடத்தலை செய்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு தீர்வை தர அவர்கள் தயாராகவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு பதில் இல்லை. இதனால் யாருக்கு வாக்களித்தும் எந்த பயனும் இல்லை.

அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தலையிட்டு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இப்போராட்டத்தில் காணாமல் போயுள்ள தனுசனின் மனைவி குழந்தை உட்பட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.