கடலுக்குச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரிழப்பு! இருவர் வைத்தியசாலையில்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பகுதியிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரு மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குறித்த இருவரும் நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியை சேர்ந்த இஸ்மாலெப்பை முஹம்மட் ஹாரிஸ் (37 வயது) மற்றும் சாய்ந்தமருது, முந்திரியடி பகுதியை சேர்ந்த சீனி முஹம்மது ஜூனைதீன் (36 வயது) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காரைதீவு - மங்கிளிப்பு சப்பு வீதியைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீ கிருஷ்ணன் (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 18ஆம் திகதி பிற்பகல் அளவில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு எனும் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்ற படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்று மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். கடந்த 28ஆம் திகதி இவர்களுடன் சென்ற ஒருவர் கடலில் வைத்து உயிரிழந்த நிலையில் அவருடைய சடலத்தை மற்றைய இருவரும் படகில் வைத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து சடலம் துர்நாற்றம் வீசியதன் காரணமாக இம்மாதம் ஏழாம் திகதி சடலத்தை கடலில் வீசியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers