இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உரித்து பத்திரம் வழங்குவதாக கூறி இரு பயனாளிகளிடம் இருந்து 8,000 ரூபாய் பணத்தை வாங்கும் போது லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த டேவிட் மில்ரோய் ராஜன் (42 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குச்சவெளி - காசிம் நகர் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள் செய்த முறைப்பாட்டையடுத்து லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே குச்சவெளி பிரதேச செயலாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதையடுத்து பிரதேச செயலாளர் லஞ்சம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஏற்கனவே விளக்கி உள்ளதாகவும் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இவர் ஏற்கனவே திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வந்த நிலையில் அங்கும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றமையினால் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் மேலும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சந்தேகநபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரியவருகின்றது.