இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த மீனவர்களை விடுவிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை

Report Print Arivakam in சமூகம்

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் 18 மீனவர்களின் குடும்பங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்து.

இதன்போது, சிறீதரன் உடனடியாகவே இந்தியத் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரனுக்கு இம்மீனவர்களின் குடும்ப நிலை, வாழ்வாதார நிலைமை மற்றும் வங்கிக்கடன் போன்ற இடர்பாடுகளை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி தமிழக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அன்றைய தினமே அவர்களை விடுதலை செய்து விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அந்தவகையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை உரிய மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய துணைத் தூதரகம் உறுதியளித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 03ஆம் திகதி எழுவைதீவு கடலுக்கு அதிகாலையில் தொழிலுக்காக சென்ற 18 மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை, மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் நாகபட்டினம் பொலிஸாரின் ஊடாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களது இயந்திரங்கள், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் இந்தியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.