கடலில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்காக சென்று காணாமல்போன இளைஞனின் சடலம் கிரான்குளம் கடற்கரை பகுதியில் இன்று மாலை கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நண்பர்களாக இணைந்து கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர்.

இவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும்போது அருகில்நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்த கடற்படையினரால் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு கடலில் காணாமல் போனவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கடலில் அள்ளுண்டுபோன இளைனை மீனவர்களும், கடற்படையினரும் தொடர்ந்து கடலில் தேடிவந்த நிலையில் இன்று மாலை கிரான்குளம் கடற் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி,காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.