புதுக்குடியிருப்பில் காணாமல்போன தற்காப்பு கலை ஆசிரியர் மீட்பு

Report Print Varunan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்ற தற்காப்பு கலை ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குடுபத்தினர் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் மீட்கபட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கபட்டு வீடு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை இன்றையத்தினம் நடந்த சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.

அதன்படி சம்பவம் இடம்பெற்ற 7ம் திகதி இரவு உணவு வாங்கிக்கொண்டு வீடு செல்லும் வழியில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் தன்னிடம் வவுனியா செல்வதற்கான வழியை கேட்டு விட்டு தன்னை இழுத்து கண்களை கட்டி கொண்டு சென்றதாகவும், ஒரு காட்டு பகுதியை போன்ற இடத்தில் உள்ள வீட்டு அறையொன்றில் தன்னை அடைத்து விட்டு அடுத்த நாள் காலை அதாவது 8ம் திகதி முதல் ஒருவர் தன்னை விசாரித்ததாகவும் நீ புலம்பெயர் புலிகளிடம் இருந்து நிதி பெறுகின்றாய்.

நீ விடுதலை புலி ஆதரவாளர் என்று தாக்கியதாகவும், உண்மையை கூறு எவ்வாறு பணம் வருகின்றது என கேட்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வான் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.