வடக்கு ஆளுனரின் முடிவுகளால் சீர்குலையும் சுகாதார சேவைகள்

Report Print Sumi in சமூகம்

வடக்கு மாகாணத்தின் மிக முக்கிய துறையாகவும் மக்கள் வாழ்வோடு அவர்களது உயிரோடு பின்னிப் பிணைந்த துறையாகவும் சுகாதாரத்துறையே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

காலத்திற்குக் காலம் இத்துறையின் பணியாளர்கள் தன்னலம் கருதாது மக்கள் நலன் கருதி ஆற்றிய சேவைகளுக்கு வரலாற்றின் பக்கத்தில் தனி இடம் உண்டு.

மன்னாரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வெற்றிநாதன் வைத்தியரிலிருந்து தம் இன்னுயிரை கொடையாக்கிய மருத்துவத் தாதி கஜேந்தினி ஈறாக ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரும் ஆற்றிய மக்கள் சேவைகள் எமது வரலாற்றின் பக்கங்களில் மறையாது பேணப்படும்.

அவ்வாறான பெருமையோடும் தன்னலமற்ற அர்ப்பணிப்புகளோடும் தற்போது இந்தச் சுகாதாரத்துறை செயற்படுகிறதா என்றால் விடை இல்லை என்றே மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.

தற்போது வடக்கின் சுகாதாரத்துறை தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பும் போதெல்லாம் அதற்குக் காரண காரியங்களை ஆராயப் புறப்பட்டால் ஒவ்வொரு தடவையும் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகவே முடிகிறது. இதற்கு மிக அண்மைய உதாரணம் மன்னாரில் கிராமிய வைத்தியசாலை ஒன்றின் முன்னால் நடந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் அதன் பின்னணியும்.

உயிலங்குள ஆர்ப்பாட்டம்

உயிலங்குளத்தில் கிராமிய வைத்தியசாலை முன்பாக ஒன்று திரண்ட பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர் என்றும் அது தொடர்பில் பிரதேச அரசியலாளர் தொடக்கம் ஆளுனரது தனிச் செயலர் வரை தெரிவித்த கருத்துகளும் அண்மை நாட்களில் மக்களின் பேசுபொருட்களாக மாறியுள்ளன.

இதுகுறித்துப் பேச வேண்டிய மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பேச மறுத்துவிட்டதும், எவ்வித நிர்வாக அதிகாரங்களோ அல்லது பதவி வழி நிர்வாக உரித்துகளோ அற்ற ஆளுனரது தனிச் செயலாளர் கர்வம் பொங்க 'ஒன்றல்ல மூன்று பெரும்பான்மையின மருந்துக் கலவையாளர்களை நாம் இடமாற்றியுள்ளோம். அவர்கள் வடக்கிற்கு இரண்டு வருடகாலம் பணியாற்ற என்றே நியமிக்கப்பட்டனர்.

அக்காலம் முடிந்து போனது. இவர்களுக்கு பதிலாள்களை நியமிக்க வேண்டியவர்கள் மாகாண சுகாதார செயலரும் மாகாணப் பணிப்பாளருமே அன்றி ஆளுனர் அல்லர்' என்று சர்வசாதாரணமாகக் கடந்துபோனதும், மகாண சுகாதாரப் பணிப்பாளரோ ' ஆளுனர் உத்தரவு. நிறைவேற்றினோம்'

என விடடேந்தியாகப் பதில் சொன்னதும் சாதாரண விடயங்கள் அல்ல. வடக்கின் முழு நிர்வாகக் கட்டமைப்பும், பிரதானமாக சுகாதார நிர்வாகக் கட்டமைப்பு எவ்வளவு தூரம் முதுகெலும்பு இன்றி இயங்குகிறது என்பதற்கு இதைத் தவிர வேறு உதாரணங்கள் இங்கு தேவையில்லை என்பதே இத்துறையின் மூத்த இளைப்பாறிய அதிகாரிகளது கருத்தாக உள்ளது.

மருந்துக் கலவையாளர் நியமனமும் மர்மங்களும்

சுகாதாரத்துறையின் முக்கியமான ஒரு பதவி நிலையாக விளங்கிய மருந்துக் கலவையாளர்கள் பதவியானது கால மாற்றத்தில் இறந்து கொண்டிருக்கும் ஒரு துறையாக மாறிவிட்டது. இவர்களிற்குப் பதிலாக மருந்தாளர்கள் என்ற பதவி நிலையே தற்போதைய மருத்துவ உலகில் கோலோச்சி வருகிறது.

இந்த மாற்றங்கள் காரணமாக சுகாதார அமைச்சும் இலங்கையில் மருந்துக் கலவையாளர்களை இனிப் பயிற்றுவித்து ஆட்சேர்ப்புச் செய்வதில்லை என்ற கொள்கை முடிவினைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்திருந்தது.

இருப்பினும் நாட்டின் நாலா பகுதிகளிலும் உள்ள பின் தங்கிய மற்றும் கிராம மட்ட வைத்தியசாலைகளில் நியமனம் செய்வதற்கெனப் போதுமான மருந்தாளர்களை உருவாக்குவதில் சுகாதார அமைச்சுத் தொடர்ந்து தோல்வி கண்டது.

இதனையடுத்து இவ்வாறான கடினப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்கென்றே ஒரு விசேட மருந்துக் கலவையாளர் அணியினை பயிற்றுவித்து நியமனம் செய்வது என்ற முடிவு 2014ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் முன்னைய மகிந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அம் முடிவிற்கமைய கல்வித் தகுதிகளின் அடிப்படையில் நடந்த ஆட்சேர்ப்பில் தெரிவான தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இதற்குக் காரணம் உரிய கல்வித் தகுதி உடையவர்கள் பிற கற்கை நெறிகளைத் தெரிவு செய்திருந்ததும் போதிய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள் இல்லாதிருந்ததுமே ஆகும் எனவும் அதனாலேதான் 2017ஆம் ஆண்டில் வடக்கிற்கு நியமனம் செய்யப்பட்ட மருந்துக் கலவையாளர் அணியில் அனேகர் பிற மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவும் சுகாதார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இந்த பிற மாகாண மருந்துக் கலவையாளர்கள் அனைவரும் 'இரண்டு வருடங்கள் மட்டும் வடக்கில் பணியாற்றினால் போதும்' என்ற விசேட ஏற்பாடுகளின் கீழ் நியமனம் செய்யப்பட்டார்களா? என சுகாதார அமைச்சு வட்டாரங்களை வினவியபோது 'அப்படி எவ்வித உறுதிமொழிகளோ அல்லது விசேட ஏற்பாடுகளோ இவர்களது நியமனத்தில் இல்லை. நாடளாவிய ரீதியில் எவ்வாறு நியமனம் செய்யப்பட்டார்களோ அவ்வாறே வடக்கிற்கும் நியமிக்கப்பட்டனர்' என்ற பதிலே கிடைத்தது.

அப்படியானால் எந்த அடிப்படையில் ஆளுனரது தனிச் செயலர் அவ்வளவு உறுதியாக 'வடக்கிற்கு இரண்டு வருடகாலம் பணியாற்ற என்றே நியமிக்கப்பட்டனர்' எனத் தெரிவித்தார்? என ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் தலை சுற்ற வைத்தன.

இரண்டு வருடங்கள் அல்ல ஐந்து வருடங்கள் வடக்கு மாகாணசபை வட்டாரங்களிலிருந்து கிடைத்த விபரங்களின்படி 2017ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட, தற்போது ஆளுனரது உத்தரவின் பெயரில் பதிலாள் இன்றி மன்னாரிலிருந்து மாகாணத்திற்கு வெளியே இடமாற்றம் வழங்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் இரண்டு மருந்துக் கலவையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வடக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட முதல் நியமனக் கடிதத்தில் 'வேறு விதமாகக் குறிப்பிட்டால் அன்றி நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அலுவலகத்தில் குறைந்தது 05 வருடங்களாவது சேவை முறிவின்றிக் கடமையாற்றுதல் வேண்டும்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் 'குறுக்கு வழிகளால்' ஆளுனரைக் கடந்த புரட்டாதி மாதம் அணுகிய சம்பந்தப்பட்ட மருந்துக் கலவையாளர்கள் 'நாம் இரண்டு வருடகாலம் மட்டுமே வடக்கில் பணியாற்றுமாறு கோரப்பட்டிருந்தோம். நாம் சிங்களவர்கள் என்பதால் வடக்கு மாகாண அதிகாரிகள் எமது இடமாற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்' என முறையிடடனராம்.

இதனைக் கேட்டு 'உணர்ச்சி வசப்பட்ட' ஆளுனர் உடனடியாக 'பதிலாள் இல்லாமல் இவர்களை விடுவிப்பதில் ஏதாவது சிக்கல் உண்டா?' என அருகில் இருந்த தமது தனிச் செயலாளரிடம் வினவியிருக்கிறார். 'வீடு கொளுத்தும் இராசாவிற்கு கொள்ளி கொடுக்கும்' தனிச் செயலாளரோ ' அப்படி எந்தச் சிக்கலும் இல்லை' என்று கூறி மருந்துக் கலவையாளரது கையிலிருந்த வடக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் கடிதப் பிரதியில் ' ஆளுனர் கட்டளை' எனக் குறிப்பிட்டு வடக்கு சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு மருந்துக் கலவையாளரது பெயரைக் குறிப்பிட்டுத் 'தயவு செய்து இவரைச் சந்தித்து ஆவன செய்யவும்' என எழுதி வழங்கியுள்ளார்.

அதிகாரம் செலுத்தும் அதிகாரம் அற்றவர்

ஆளுனரின் தனிச் செயலாளர் என்பது எவ்வித நிர்வாக அதிகாரமும் அற்ற பதவி. அவர்கள் ஆளுனரது தனிப்பட்ட நலன்களைக் கவனிப்பது, விடயங்களை கூட்டிணைப்பது மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றையே மேற்கொள்ள உரித்துண்டு. இவர்களால் எக்காலத்திலும் நிர்வாக விடயங்களில் தலையிடவோ அல்லது உத்தரவிடவோ முடியாது.

இவர்கள் ஆளுனரது பணியாட்கள் என்ற வகையிலே அடங்குவர். அவ்வாறிருக்க வடக்கு மாகாண ஆளுனரின் தனிச் செயலாளரது 'தர்பார்' எல்லை கடந்ததாக இருப்பதாக ஆளுனர் மாளிகைக்குள்ளேயே எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன. வயதில் இளையவரான இவர் கடமைப் பொறுப்பேற்றுச் சில நாட்களிலேயே நீண்டகால நிர்வாக அனுபவம் உள்ள ஆளுனர் அலுவலக உயரதிகாரிகளுடன் நிதி நிர்வாகம் தொடர்பில் முரண்பட்டுள்ளார்.

ஆளுனர் துறைசார் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அனுமதி இன்றி உள்ளே புகுந்து ஆளுனருடன் உரையாடுவது, கலந்துரையாடல்களில் கருத்துத் தெரிவிப்பது போன்ற நடைமுறைகளுக்கு விரோதமான முதிர்ச்சி அற்ற நடவடிக்கைகளில் இத் தனிச் செயலாளர் ஈடுபடுவது குறித்து வடக்கின் உயர் மட்ட அதிகாரிகள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறான ஒரு தனிச் செயலாளரும் நிர்வாகத் துறையில் எவ்வித முன்னனுபவமும் அற்ற ஆளுனரும் உத்தரவிட்டால், அவர்களுக்கு விடயங்களை எடுத்துச் சொல்லும் கடமையும் பொறுப்பும் உள்ளவர்களும் பொதுமக்களுக்கு இடையறாத சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டியவர்களுமான சுகாதாரத்துறை உயரதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்வாறு செயற்பட்டுள்ளனர்? என்ற தேடலில் இறங்கினோம். அதில் வெளியான விடயங்கள் வடக்கின் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மிகப் பலவீனமான நிர்வாகத்திறனை துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றன.

'நோயாளர் இறந்தால் உங்களுக்கு என்ன?'

மருந்தாளர்களது இடமாற்றம் தொடர்பில் பதிலாட்கள் இன்றி அத்தியாவசிய சேவையான சுகாதார சேவையின் பணியாளர்களை விடுவிப்பது பொதுமக்களுக்கான சேவைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் குரலெழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த ஆளுனர் ' சிங்களவர்களை நாம் அவர்களது இடத்திற்கு அனுப்புவோம். இங்கு அதனால் சேவைகள் சீர்குலையட்டும். அவ்வாறு சீர்குலையும் பேர்து மக்கள் போராடுவார்கள். அந்தவேளையில் நான் அழுத்தம் பிரயோகித்து வடக்கிலேயே தமிழ்பேசும் மருந்துக் கலவையாளர்களை பயிற்றுவித்து நியமிப்பதற்கு அனுமதியைப் பெற்றுத் தருவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'சேவைகளைச் சீர்குலைத்து நோயாளர்களது உயிர்களைப் பணயம் அதிலிருந்து தீர்வைப் பெறுவதற்கு நிர்வாக உயரதிகாரிகள் தேவையில்லையே. எமது கடமை சுகாதார சேவைகள் பொதுமக்களுக்குத் தடையின்றி கிடைக்கச் செய்வதே தவிர அதனைச் சீர்குலைத்துத் தீர்வைப் பெறுவதல்ல' என வாதிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு, வடக்கு சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் ' ஏன் இப்படி இதை பிரச்சினையாக எடுக்கிறீர்கள். இது உங்களது தனிப்பட்ட குடும்ப விடயம் இல்லையே.

நோயாளர் இறந்தால் உங்களுக்கு என்ன? மறு பேச்சில்லாமல் மருந்துக் கலவையாளரை ஆளுனர் உத்தரவிட்டபடி பதிலாள் இல்லாமல் உடனடியாக விடுவித்து விட்டு வைத்தியசாலைகளைப் பூட்டுங்கள்' என்று 'ஆலோசனை' வழங்கினாராம்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் வடமாகாண உயரதிகாரிகள் 'இராணுவ ஆளுனர் சந்திரசிறி கூட அதிகாரிகளது ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து தான் எடுத்த முடிவுகளை மாற்றியிருக்கிறார். இந்த ஆளுனரோ தான்தோன்றித்தனமாக பின்விளைவுகள் குறித்துக் கவலைப்படாது தனது தற்கால மற்றும் எதிர்கால நலன்களது அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறார்' எனத் தெரிவித்தனர்.

மேலும் 'ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 16ம் திகதி முடிவடைய உள்ள நிலையில் அவரால் நியமிக்கபட்ட ஆளுனரது ஆயுளும் முடிவுக்கு வந்து விடும். ஆளுனர் குறிப்பிடுவது போல அனுமதி பெற்று ஆட்சேரப்பு மேற்கொண்டு பயிற்சி வழங்கி புதிய மருந்துக் கலவையாளர்களை நியமிப்பதாயின் அதற்கு ஆகக் குறைந்தது 18 மாதங்கள் தேவையாகும். அடுத்த மாதம் வீடு செல்ல உள்ளவர் எவ்வாறு இதனைச் செய்ய முடியும்?' என்ற நியாமான கேள்வியை எழுப்பினர்.

சுகாதாரத்துறை உயரதிகாரிகளது கருத்துகளின்படி மருந்துக் கலவையாளர்களைப் பதிலாட்கள் இன்றி விடுவிப்பது என்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையப்போகிறது.

காரணம் சுகாதார சேவையில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஐம்பது வீதத்திற்கு அதிகமான ஆளணி பிற மாகாணத்தவர்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இவர்கள் அனைவரும் தமக்கான பதிலாட்கள் கடமையைப் பொறுப்பேற்கும் வரையில் வடக்கில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். மருந்துக் கலவையாளர்களைப் பின்பற்றி இவர்களும் ஆளுனரிடம் சென்று பதிலாள் அற்ற இடமாற்றத்தினைப் பெற்று வெளியேறினால் வடக்கின் சுகாதார சேவைகள் கடுமையாகச் சீர்குலையும் ஆபத்தை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் மருந்தாளர்களுக்கு பதிலாள் அற்ற இடமாற்றத்தை வழங்கியதை முன்னுதாரணமாக கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் ஆகியற்றை பிற சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் நாடினால் அதற்கு பதிலளிப்பது யார்? என்ற கேள்விக்கும் எவரிடமும் விடையில்லை.

முரண்டு பிடிக்கும் மன்னார் மருந்துக் கலவையாளர்களை விடுவிக்கும் விடயத்தில் மற்றைய பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் அனைவரும் 'நல்ல பிள்ளைகளாக' அடங்கி விட மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டும் 'பொதுமக்களது நலன்களைப் பலிகொடுத்து ஆளுனரது உத்தரவினை நிறைவேற்றத் தயாரில்லை' என உறுதியாக உள்ளதால் அவர் மீது ஆளுனர் கடும் சீற்றத்தில் இருக்கிறார் என வடக்கு மாகாணசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் இருந்து ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்வதற்கு முன்னமே மருந்துக் கலவையாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் மனிதாபிமான அடிப்படையில் 'உரிய பதிலாளுடன் விடுவிக்கப்படலாம்' என்றே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வடக்கு சுகாதார அமைச்சின் முன்னைய செயலாளர் ஆகியோரால் வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்னளிக்கப்பட்டதாக ஆணைக்குழுத் தரப்பிலிருந்து தெரிய வந்தது.

இந் நிலையில் இந்த விண்ணப்பங்களுக்குப் பதில் வழங்கிய மத்திய மாகாண மற்றும் மேல் மாகாண பொதுச்சேவைகள் ஆணைக் குழுக்கள் இந்த மருந்துக் கலவையாளர்களை 'பதிலாள் இன்றி' ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தனவாம். அதாவது 'பதிலாக ஒருவரை உங்களுக்கு -வடக்கிற்கு- நாம் தரமுடியாது.

விரும்பினால் பதிலாள் இல்லாமல் உங்கள் வசமுள்ள மருந்துக் கலவையாளர்களை எமக்கு நீங்கள் விடுவித்து அனுப்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம்' என்பதுதான் இதன் சாரம்சம். இவ்விடயத்தினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சிற்குத் தெரியப்படுத்திய வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு ' அவ்வாறு பதிலாள் இல்லாமல் விடுவிக்க உங்களுக்குச் சம்மதமா?' எனக் கேட்டிருந்தது.

அமைச்சு இது குறித்த அபிப்பிராயத்தினை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வினவியபோது 'பதிலாள் இன்றி விடுவிக்க முடியாது' என்ற பதிலே மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரால் வழங்கப்பட்டிருந்தது என மாகாண சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதனையடுத்து ஆளுனரது உத்தரவினைச் செயற்படுத்தி பதிலாள் இல்லாமல் குறித்த இரண்டு மருந்துக் கலவையாளர்களையும் விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினராலும் அழுத்தம் வழங்கப்பட்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தமது முடிவிலிருந்து பின்வாங்கவில்லையாம்.

இதனை அடுத்து 30.09.2019ம் திகதியிடப்பட்டு வடக்கு மாகாண சுகாதார செயலாளரால் நேரடியாக இருவரில் ஒரு மருந்துக் கலவையாளருக்கு பதிலாள் இன்றி மன்னாரிலிருந்து மேல் மாகாணத்திற்கு விடுவிப்பதாக கடிதம் வழங்கப்பட்டதாம் என மாகாண சுகாதார அமைச்சில் விடயமறிந்தவர்கள் தெரிவித்தனர்.

இக்கடிதத்துடன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து விடுவிக்கப்படாமலே குறித்த மருந்துக் கலவையாளர் மாவட்டத்தை விட்டு மாயமாகியிருக்கிறார் என எமக்குத் தெரியவந்துள்ளது.

மாயமான்

எமது புலனாய்வில் கிடைத்த தகவல்களிலிருந்து இந்த மருந்துக் கலவையாளர் இப்படி மன்னாரிலிருந்து மாயமாகுவது இது இரண்டாவது தடவையாம். முதல் தடவையாக இதே மருந்துக் கலவையாளர் மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றியபோது தலைமறைவாகியிருக்கிறார்.

இவர் மொறட்டுவ வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக கடிதம் கிடைத்த பின்பே மன்னார் வைத்தியசாலை தரப்பிற்கு இவர் மாவட்டத்தில் இல்லாத விடயம் தெரியவந்துள்ளது. இது நடந்தது 2017- 2018 ஆண்டு காலப் பகுதி என அறியமுடிந்தது. மீண்டும் 16.03.2018 அன்று மன்னார் வைத்தியசாலையில் இதே மருந்துக் கலவையாளர் கடமையைப் பொறுப்பேற்றிருக்கிறார்.

எனினும் இவர் மன்னாரை விட்டு உரிய அனுமதி இன்றி இன்னொரு மாகாணத்தில் கடமையாற்றியது குறித்து எவ்வித விசாரணைகளும் நடந்ததாக அறியமுடியவில்லை. இவர் எவ்வாறு மீண்டும் மன்னாரில் கடமையேற்றார், அதற்கு அனுமதி யாரால் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற தகவல்களும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல இந்த மருந்துக் கலவையாளருக்கான நியமனக் கடிதம் 29.04.2019 அன்றே வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 2017ஆம் ஆண்டிற்குப் பிற்திகதி இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் குறித்து வடக்கின் மூத்த இளைப்பாறிய சுகாதாரத்துறை உயரதிகாரிகளிடம் கருத்துக் கேட்டபோது ' இவ்வாறான சம்பவங்கள் எவையும் எமது சேவைக் காலத்தில் நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. இது ஒரு முற்று முழுதான நிர்வாக முறைகேடு.

நிறுவனத் தலைவரிடம் உரிய வகையில் கடமைகள், பொறுப்புகள் மற்றும் அரச இருப்புகளைப் பாரம் கொடுத்து 'இவரிடம் கோரிப் பெறுவதற்கு எதுவும் இல்லை' என்ற சான்றிதழைப் பெற்ற பின்னரே நிறுவனத்திலிருந்து ஒரு அரச உத்தியோகத்தர் விடுவிக்கப்படவேண்டும்.

மாறாக நிறுவனத் தவைவருக்குத் தெரியாமல் பிறிதொரு மாகாணத்தில் வேலைக்கு அறிக்கையிடுவது, மீண்டும் வந்து நிறுவனத்தில் கடமைப் பொறுப்பேற்பது என்பது அதுவும் தகுதி காண் காலத்தில் இவ்வாறு செயற்படுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

னவே குறித்த அலுவலர் அரச பணிகளைச் செய்வதற்கு எவ்விதத்திலும் தகுதி அற்றவராகவே கருதப்படவேண்டும். மேலும் இக் குளறுபடிகள் நடந்த காலத்தில் கடமையில் இருந்த சகல உயரதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆவர்' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தனர்.

'தமிழ்பேசும் அலுவலர்கள் தத்தமது மாவட்டத்தின் உள்ளே கேட்கும் இடமாற்றத்திற்கே பதிலாள் தேவை என அடம்பிடிக்கும் சுகாதார சேவை உயரதிகாரிகள், எவ்வாறு இந்த மருந்துக் கலவையாளர் தாம் விரும்பியவாறு விரும்பிய மாகாணத்தில் விரும்பிய காலம் வரை கடமையாற்ற அனுமதித்தார்கள்?' என சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இரண்டாவது நபரும் மாயமானார்

இந்த நிலையிலேயே இரண்டாவது மருந்துக் கலவையாளரும் நேரடியாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து விடுவிப்புக் கடிதத்தைப் பெற்று இடமாற்றத்தில் செல்லப்போவதாக தாம் பணியாற்றிய உயிலங்குளம் கிராமிய வைத்தியசாலை ஊழியர்களிடம் கடந்த வெள்ளியன்று (04) தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் விடயத்தை ஊரில் கசியவிட்டதையடுத்து ஊர் மக்கள் திரண்டு கடந்த 07ம் திகதியன்று உயிலங்குளம் கிராமிய வைத்தியசாலையின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினார்கள். இவர்களால் வன்னி மாவட்ட பா.உ சாள்ஸ் நிர்மலநாதனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. ' இந்த விடயத்தை உரிய இடங்களில் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவேன்' என அவரும் பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

இருப்பினும் அதே நாள் மாலையில் 04.10.2019 திகதியிடப்பட்ட மாகாண சுகாதார செயலாளரது விடுவிப்புக் கடிதத்துடன் மன்னார் திரும்பிய இரண்டாவது மருந்துக் கலவையாளர் மன்னாரிலிருந்து விடுவிப்புக் கடிதத்தினைப் பெறாமலேயே தமது கடமைகளையோ அல்லது அரச இருப்புகளையோ (புழஎநசnஅநவெ ஐnஎநவெழசல) உரிய வகையில் கையளிக்காது தலைமறைவாகியுள்ளார் என உயிலங்குளம் மருந்துவமனை வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தேர்தல்கள் திணைக்களம் அதிரடி

இவ்வாறு அடுத்தடுத்து பதிலாட்கள் இன்றி உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது தேர்தல் காலத்தில் சுகாதர ஊழியர்களை விடுவிப்பதன்மூலம் சுகாதார சேவைகளைத் திட்டமிட்டுச் சீர்குலைத்துப் பொதுமக்களது உயிர்களுக்கு உலை வைக்கும் செயற்பாட்டினை வடக்கு ஆளுனர் அரசியல் நோக்கத்துடன் தமது அதிகாரிகள் ஊடாகச் செயற்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் அனைத்து மட்டங்களிலும் எழுந்துள்ளது.

இதனிடையே, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொண்ட முறைப்பாடுகளை அடுத்து மன்னார் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இவ்விடயத்தில் 08ம் திகதியன்று அதிரடியாகத் தலையிட்டு குறித்த இரண்டு மருந்துக் கலவையாளர்களுக்கு வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களை இரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளதாக மன்னார் செயலகத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தமுடிந்தது.

எம்முடன் கலந்துரையாடிய வடக்கின் மிக மூத்த இளைப்பாறிய மாகாண உயரதிகாரி ஒருவர் சொன்னார் 'இவ்வாறு திடீர் திருப்பங்களுடன் நீண்டு செல்லும் இந்த மருந்துக் கலவையாளர்கள் இடமாற்ற விவகாரம் வெறும் இருவரது இடமாற்றம் என்ற வகைக்குள் அடக்கி மறந்து விடக்கூடிய விடயம் அல்ல.

மாறாக நீண்டகாலப் போக்கில் வடக்கின் சுகாதார திணைக்களத்தின் இயங்கு திசையினைத் தீர்மானிக்கப்போகும் பாரிய பரிமாணங்களை இது கொண்டுள்ளது. ஆளுனருக்கு ஆலோசனை சொல்லி அவரை வழிப்படுத்தவேண்டி துறைசார் உயர் அதிகாரிகள் அதனைச் செய்யாது ஆளுனருக்கு 'வால் பிடிப்பதால்' முழுச் சுகாதார சேவைக் கட்டமைப்பும் ஏன் வடக்கின் முழு நிர்வாகக் கட்டமைப்புமே சீர்குலையும் அபாயத்தில் உள்ளது. இறுதியில் இதன் நேரடி விளைவுகளை நேர்கொண்டு பலியாகப்போவது இது எவற்றையுமே அறியாத அப்பாவிப் பொதுமக்களது உயிர்கள்தான்'.