சஹ்ரானின் மகள் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் கொழும்பு ஷெங்கீரீலா ஹோட்டலில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் உட்பட தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

தற்போது தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்ற இடங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய ஷெங்கீரீலா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய மொஹமட் சஹ்ரான் ஹாசிம் மகள், அவரது மனைவியான பாத்திமா காதியாவின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் விசாரணைகள் தொடர்பான மேலதிக அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.