தமிழ் மாணவர்களின் போராட்டத்தால் இரத்துச் செய்யப்பட்ட சிங்கள அதிபரின் நியமனம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவர் சேவையில் இருக்கும் பொழுதே சிங்கள அதிபர் ஒருவரை நியமித்துள்ளமையை ஆட்சேபித்து அவ் வித்தியாலயத்தின் மாணவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஹட்டன் - தலவாக்கலை பிரதான வீதியை மறித்து இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

கொட்டகலை பிரதேசம் தமிழ் மக்களின் ஆதிக்கத்தை கொண்ட பிரதேசமாகும். இங்கு பிரதானமாக காணப்படும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவரே இருக்க வேண்டும் என்பது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கையாகும்.

ஆனால் சிங்கள அதிபர் ஒருவரை இப்பாடசாலைக்கு தற்காலிகமாக நியமிப்பதாகவும், பின்னர் இவர் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் பகுதியில் இருந்து இடமாற்றம் பெற்றுள்ள இந்த சிங்கள அதிபர் அப்பகுதியில் மக்களின் அவப்பெயரை பெற்றவர் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் அதிபர் ஒருவர் கடமையில் இருக்கும் பொழுதே நிரந்தரமாக ஒரு சிங்கள அதிபரை நியமித்தமையை நாம் கண்டிப்பதாகவும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை இல்லை என்பதையும் இம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரத்தில் இச்சம்பவத்தை கேள்வியுற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் போராட்ட இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டார்.

இவ்வாறு அவ்விடத்திற்கு வருகை தந்த ஆறுமுகன் தொண்டமான் நிலைமையை ஆராய்ந்து உடனடியாக நியமிக்கப்பட்டுள்ள சிங்கள அதிபரை இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்ததையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த முயற்சியால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

அதேநேரத்தில் தமிழ் பிரதேசத்தில் தமிழ் பாடசாலைக்கு அதிபராக தமிழ் அதிபர்களே நியமிக்கப்பட வேண்டும் எனவும் சிங்கள அதிபர்களை தமிழ் பாடசாலைக்கு நியமித்து அவர்களின் ஆதிக்கத்திற்கு தமிழ் பாடசாலைகளை வழி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு காலமும் இடம் கொடுக்காது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.