வவுனியாவில் மாணவர்களுக்கென சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா,நொச்சிமோட்டை பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்கென நேற்று குடிதண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நொச்சிமோட்டை, கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 300 மாணவர்களின் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கும் குடிதண்ணீர் வழங்குமாறு அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தமிழ், சிங்கள சகோதரர்களின் நிதிப் பங்களிப்பில் வன்னி மக்களின் காப்பகத்தினால் நாள் ஒன்றிற்கு 700 லீற்றர் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மணிப்புரம் கிராம மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பொதுக்காணி ஒன்றில் குடிதண்ணீர் திட்டம் அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் பழைய கற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின்போது, அப்பகுதியிலுள்ள வசதியற்ற மக்களின் தேவைகள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், அம்மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிதண்ணீர் சுத்திகரிக்கும் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைப்பதாக கலந்து கொண்ட பிரதிநிதிகளினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கே. குலேந்திரகுமார், ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி செ.சசிகுமார், சமூக ஆர்வலர்களான ஜோர்ஜ், நீல் சாந்த, சிசிரகுமார, நொச்சிமோட்டை கிராம அலுவலகர் என்.குபேந்திரன், மணிப்புரம் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் க.சிறிதரன், பழைய கற்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கி. சுகுமார், ஆசிரியர் சதீஸ், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.