ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக பிரார்த்திக்கும் தமிழகம்! குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டது ரோபோ

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

இரண்டாம் இணைப்பு

அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோ குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக அனுப்பப்பட்ட ஹைட்ராலிக் கருவி சுஜித்தின் ஒரு கையை கட்டியுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோவின் இறுக பிடிக்கும் கருவி தற்போது சுஜித்தின் இன்னொரு கையை பற்றி பிடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

அடுத்தகட்டமாக சுஜித்தை மேலே கொண்டு வரும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குழந்தையை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மழை மெதுவாக பெய்ய ஆரம்பித்துள்ளதாகவும், மழை நீர் உள்ளே செல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குழந்தைக்காக தமிழகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித், 100 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி - மணப்பாறையில், நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் சுமார் 13 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தின் தலையை சுற்றி மண் சரிந்துள்ளதாகவும், சுர்ஜித்தின் அழுகை சத்தம் எதுவும் கேட்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இது தொடர்பில் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது குழந்தையை மீட்பதற்காக கயிறு மூலம் அவரின் கையில் சுருக்கு போடப்பட்டது. ஒரு கையில் சுருக்கு போட முடிந்த போதும் மற்றைய கையில் போட முடியவில்லை என தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை மீட்பதற்காக பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தடையின்றி ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்ததால் அனைவரும் நிம்மதியாக இருந்து வந்தனர்.

இரவு நேரத்தில் குழந்தை பயந்துவிட கூடாது என்பதற்காக அவரின் அம்மா மேரி குழந்தையுடன் பேசிய போது, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என அவர் கூற குழந்தை "உம்" என்று பதிலளித்துள்ளார்.

எனினும் நேரம் செல்லச்செல்ல குழந்தை சோர்வாகி விட பெற்றோர் பதற்றமடைந்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 26 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றின் அருகே குழி அமைக்கப்பட்டு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.