புதை குழிகளாக மாறும் ஆழ்துளை கிணறுகள்! தமிழக மக்களை கலங்க வைக்கும் சுர்ஜித் மீட்பு நடவடிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

தீபத் திருநாள் இம்முறை கலக்கத்தோடும் ஏக்கத்தோடும் ஆரம்பித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 இற்கு ஆழ் துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் சிறுவன் சுர்ஜித். அவனை பாதுகாப்பாக மீட்பதற்காக மீட்புப் படையினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களோ பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திருச்சி - மணப்பாறையில், நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் சுமார் 32 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இது தொடர்பில் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது குழந்தையை மீட்பதற்காக கயிறு மூலம் அவரின் கையில் சுருக்கு போடப்பட்டது. ஒரு கையில் சுருக்கு போட முடிந்த போதும் மற்றைய கையில் போட முடியவில்லை என தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை மீட்பதற்காக பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தடையின்றி ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்ததால் அனைவரும் நிம்மதியாக இருந்து வந்தனர்.

இரவு நேரத்தில் குழந்தை பயந்துவிட கூடாது என்பதற்காக அவரின் அம்மா மேரி குழந்தையுடன் பேசிய போது, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என அவர் கூற குழந்தை "உம்" என்று பதிலளித்துள்ளார்.

எனினும் நேரம் செல்லச்செல்ல குழந்தை சோர்வாகி விட பெற்றோர் பதற்றமடைந்துள்ளனர். ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 32 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றின் அருகே குழி அமைக்கப்பட்டு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி, குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித் தோண்டப்பட உள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.

குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ளது. புதிதாக தோண்டப்படும் குழியில், தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர்.

இதனிடையே குழி தோண்டும் பணியை ரிக் இயந்திரம் இன்னும் 1 மணி நேரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

குழந்தை சுர்ஜித்தின் நிலையையும் அவனின் பெற்றோர்களின் கதறல்களைம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் பொது மக்கள் மீண்டு வா மகனே... நீ இரண்டாவது முறை பூமித் தாயிடம் இருந்து வெளியே வரப்போகிறாய். நீ பாதுகாப்பாக வெளியே வந்தால் மட்டுமே எங்களுக்கு இது தீபாவளி என்று சோகத்தோடு பகிர்ந்து வருகின்றார்கள்.

குழந்தையை மீட்கப் போராடும் மீட்புப் படையினரின் சிரத்தையையும் பொது மக்கள் பாராட்டியுள்ளதுடன் அனைத்து தரப்பினரும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை முறைகேடா அமைக்கப்படும் ஆழ் துளைக் கிணறுகள் குழந்தைகளுக்கான புதைகுழிகளாக மாறுவதாகவும் இது தொடர்பில் அரசு மௌனம் காக்காமல் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதுடன், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.