38 மணி நேரத்தை தாண்டியும் தொடரும் மீட்பு நடவடிக்கை - சுரங்கம் ஊடாக உள்நுழையும் 3 வீரர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் நடவடிக்கை 38 மணி நேரத்தை கடந்துள்ள போதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில், குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 110 அடி ஆழமாக மற்றுமொரு குழி தற்போது தோண்டப்பட்டு வருகிறது.

ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு மணித்தியாலங்களில் 110 அடி ஆழமாக குழி தோண்டப்படும் என மீட்பு குழுவினால் நம்பிக்கை வெளியிடப்படடுள்ளது.

தோண்டப்படும் குழியின் ஊடாக சென்று அங்கிருந்து ஆழ்துளை கிணற்று பகுதிக்கு சுரங்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதன்மூலம் குழந்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 அடி நீளமான சுரங்க பாதை அமைக்கும் பணியில் மூன்று தீயணைப்பு வீரர்கள் ஈடுபடவுள்ளனர். கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய தீயணைப்பு வீரர்கள் பாரிய குழிக்குள் இறங்கி இந்த பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும்.