இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை அகற்ற கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Report Print Yathu in சமூகம்
25Shares

கிராஞ்சி, இலவங்குடா கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும்,

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, இலவங்குடா கடற்பகுதியில் 35 இற்கும் அதிகமான இந்திய இழுவைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பாரிய அசௌகரியங்களையும், வாழ்வாதார ரீதியான இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களின் 35 இழுவைப்படகுகள் மன்னார் மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி பூநகரிப் பிரதேசத்தின் கிராஞ்சி, இலவங்குடா கடலில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேசத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்ற கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, நாச்சிக்குடா, இரணைதீவு, இரணைமாதாநகர் மற்றும் முழங்காவில் பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் தமது பிரதான சீவனோபாயமாக மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் நண்டு, இறால், மீன் என்பன அதிகளவில் விளைகின்ற இலவங்குடாக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ் இழுவைப் படகுகளால் கிராஞ்சியைச் சேர்ந்த 256 இற்கும் அதிகமான மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

அதேவேளை மேற்படி இழுவைப் படகுகளிலிருந்து வெளியேறும் ஒயில் மற்றும் இயந்திரக்கழிவுகள் கடந்த மூன்று வருடங்களாக கடலில் கலப்பதன் காரணமாக இப்பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் குறைவடைந்துள்ளதை ஆய்வுரீதியாக அறியமுடிகிறது.

நீண்டகாலமாக கடலினுள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இவ் இழுவைப்படகுகளில் சில வெளித் தெரியாத வகையில் கடலுள் மூழ்கியுள்ள அதேவேளை இப் படகுகளின் இயந்திர உலோகப் பகுதிகள் உக்கி கடலடிக்குள் சென்றுள்ளதால் மீன்பிடித் தொழிலாளர்கள் பயணிக்கும் படகுகளும் எதிர்பாராத விதமான விபத்துக்களையும், சேதங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

மன்னார்க் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட இவ் இழுவைப்படகுகளை கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திற்கு கொண்டுவந்து அப்படகுகளின் பாதுகாப்புக் கருதி கிராஞ்சி கடற்படை முகாமுக்கு அண்மையாகவுள்ள இலவங்குடா கடலில் வருடக்கணக்காக நிறுத்தி வைத்திருப்பது அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், தொழில்வாய்ப்பையும் சிதைக்கின்ற செயலாகும்.

இவ்விடயம் தொடர்பில் கடந்த 2018.04.27, 2018.06.12 ஆம் திகதிகளில் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் ஆராயப்பட்டு மேற்படி இழுவைப்படகுகளை அகற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே தயவுசெய்து வறுமையிலும், வாழ்வாதார வழிகளற்றும் வாழ்ந்து வருகின்ற பூநகரி மீனவர்களின் அவல வாழ்வை கருத்திற்கொண்டு இலவங்குடா கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்,எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம், பூநகரி பிரதேசசபை, பூநகரி பிரதேச செயலகம், கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியோருக்கும் அதன் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளார்.