சேவைகளை முன்னெடுப்பதற்கு போதிய பேருந்துகள் இல்லை: முல்லைத்தீவு இ.போ.ச

Report Print Yathu in சமூகம்
46Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு போதிய பேருந்துகள் இன்மை மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறை தடையாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபையின் முல்லைத்தீவு சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்படுவதனால் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் எதுவித போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் இவ்வாறான கிராமங்களில் வாழும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் அன்றாடம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை மாந்தை கிழக்கு, அம்பாள்புரம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கிழ் உள்ள அம்பகாமம் ஆகிய பகுதிகளுக்கான பாடசாலை பேருந்து சேவைகளை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றுக்கான சேவைகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இலங்கை போக்குவரத்துச்சபையின் முல்லைத்தீவுச்சாலை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு வினவிய போது,

மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் தனியார் போக்குவரத்துச் சேவையினரின் அத்துமீறிய செயற்பாடுகள் பெரிதும் தடையாகவுள்ளன.

இதனால் நடைபெறுகின்ற சேவைகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பாடசாலை சேவைகளை முன்னெடுப்பதற்குரிய நேர ஒழுங்குகளில் சேவைகளை முன்னெடுக்கும் போது தனியார் சேவைகள் இவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பில் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை ஏனைய இடங்களுக்கான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை முன்னெடுப்பதற்குரிய போதிய பேருந்துகள் இன்மை மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறை என்பன தடையாகவுள்ளதாகவும் தற்போது 22 வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன என்றும் சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.