கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்ற தீயணைப்புப் பிரிவுக்கான 21 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கென தனியான தீயணைப்புப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளபோதும் இதற்கான ஆளணி வளம் இதுவரை பூர்த்தி செய்யப்படாது காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு செம்பரம்பர் மாதம் 11ம் திகதி மீள்குடியேற்ற அமைச்சின் 97 மில்லியன் ரூபா நிதி செலவு செய்யப்பட்டு குறித்த வாகனங்கள் என்பன கரைச்சிப் பிரதேச சபையிடம் மாவட்ட அரசாங்க அதிபரால் கையளிக்கப்பட்டுள்ளபோதும், இன்று வரை இதற்கான ஆளணி வெற்றிடம் நிரப்பப்படாத நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்திற்கான தீயணைப்புப்பிரிவிற்கான இயந்திரங்களும் கட்டடங்களும் எங்களிடம் பொறுப்புத் தரப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கான ஆளணி வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை.
தற்போது பயிற்றுவிக்கப்பட்ட ஆளணி இன்மையால் கரைச்சிப்பிரதேச சபையினுடைய சிற்றூழியர்களை வைத்து குறித்த பிரிவை இயக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. 32 பேரை தீயணைப்புப்பிரிவிற்கு நியமிப்பதற்கான வடமாகாண பிரதம செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 01 திகதி முதல் 21 ஆளணி வெற்றிடங்களை நிரப்பி செயற்படுத்துவதற்கான அனுமதிகள் கிடைத்துள்ளன. இதனால் கடந்த காலங்களில் அவசரத் தேவைகளின்போது, தீயணைப்புப் பிரிவை செயற்படுத்துவதில் தடைகளும் தாதமங்களும் காணப்பட்டன இதற்கான ஆளணியை நிரப்பும் போது அதனை சீராக செயற்படுத்த இலகுவாக இருக்கும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.