கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

Report Print Kumar in சமூகம்
411Shares

ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரியின் உடல் இன்று மாலை மட்டக்களப்பு, வவுணதீவு குறிஞ்சாமுனை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி நேற்று மாலை உயிரிழந்தார்.

தனது 67வது வயதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கேஸ்வரி அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் அறிவித்திருந்தனர்.

கடந்த சில வருடங்களாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர்.

2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளீர்க்கப்படாமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதனை தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாட்டினை குறைத்து, எழுத்துப்பணி, பொதுப்பணிகளின் தன்னை ஈடுபடுத்தி வந்ததுடன் கிழக்கு மாகாணம் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல வரலாற்று தடங்களை எழுதியுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொன்மைகளை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளதுடன் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் கூட தனது ஆய்வுப்பணியை கொண்டு தொடர்ந்து எழுதிவந்தார்.

ஆன்னாரின் மறைவு என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும் என புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று வவுணதீவு, கன்னன்குடாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை வவுணதீவு, குறிஞ்சாமுனை மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வாழ்க்கை வரலாறு

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவில் சின்னத்தம்பி கதிராமன், வே. திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக பிறந்த தங்கேஸ்வரி, கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார்.

இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட் ஃவின்ஸ்டன் மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இவர், தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.

தொழில் நடவடிக்கை

தங்கேஸ்வரி ஆரம்பத்தில் கலாசார அமைச்சின் கீழுள்ள இந்துக் கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 1992- 1995 வரை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில்

பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியலில்

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

எழுத்தாளராக

இவரின் முதலாவது ஆக்கம் 1972 ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது.

இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சவர், தினகரன், வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், நினைவிதழ்களிலும் எழுதியவர்.

எழுதியுள்ள நூல்கள்

புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்த இவர் இதுவரை பின்வரும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

 • விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982,
 • குளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985,
 • மாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995
 • மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007,
 • கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007,
 • கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007,

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

 • குளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் – 1994ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
 • சிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் – 1995ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
 • “வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடாதமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப்பட்டது.
 • “தொல்லியல் சுடர்” பட்டம் 1996ல் கனடா தமிழ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.
 • “முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக 2000ம் ஆண்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.