தீபாவளி தினமான இன்று வவுனியாவில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடி வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
பல நாட்களாக நாங்கள் வீதிகளில் போராடிவருகிறோம். எமக்கான நீதியை வழங்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதனை பெற்றுக்கொள்ளலாம் என்று பேரம் பேசும் செயற்பாட்டில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் இனத்தை அழித்த மகிந்தவின் மகனிற்கு எமது அரசியல்வாதிகள் ஆதரவு அளிப்பது கவலை அளிப்பதுடன், 2017ம் ஆண்டு தீர்வு வரும் என்று சம்பந்தன் தெரிவித்த நிலையில் இரு வருடங்கள் கடந்தும் எதுவும் கிடைக்காமல் போலி வாக்குறுதிகளால் ஏமாந்த நிலையில் தமிழர்கள் தெருவில் விடப்பட்டுள்ளனர் என்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் இணைப்பாளர்,
“சிங்கத்திடம் புலிகள் தோற்ற நாட்டில் ஒட்டகங்கள் அடங்கி இருக்கவேண்டும்” என்று அரச பேருந்து ஒன்றில் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் விடுதலை புலிகளிற்கு எதிராக பணியாற்றிய சித்தார்தன், புளொட், டக்ளஸ், கருணா, சம்பந்தன், ஈபிடிபி, கூட்டமைப்பு, பிள்ளையான் ஆகியோருக்கு நன்றி சொல்லவேண்டும்.
இந்த துரோகிகள் நம்மிடம் இல்லை என்றால் தமிழர்கள் எப்போதோ சுதந்திரத்தை அனுபவித்திருப்பார்கள். பேருந்தில் இந்த வாசகம் வந்திருக்காது.
இவர்களே தமிழர்களின் சுதந்திரத்தை பறித்தவர்கள், பலவீனத்தாலும் சுயநலத்தாலும் தமிழர்களை விற்றவர்கள்” என்றார்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெருவிலே, தமிழர்கள் சிங்கள வேட்பாளர்களிற்கு வாக்களிக்க கோரி தேர்தல் திருவிழாவில் நீங்கள்?, தமிழ் சிவில் அமைப்பு உடந்தையா?, புத்தத்திற்கு சம்பந்தன் முதலிடம் கொடுத்த போது தமிழ் புத்திஜீவிகள் எங்கு போனீர்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.