தமிழர்கள் ஏமாற்றப்படுவது புதிதல்ல ஏமாறும் விதம்தான் புதிது

Report Print Varunan in சமூகம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காட்டிய அசமந்த போக்கும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் காட்டிய ஏமாற்றத்திற்கும் தமிழர்கள் இன்னும் துணை போகத் தயாரில்லை. கடந்த கால ஆட்சியை பார்கின்ற பொழுது மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்திலே தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகியிருந்தாலும் பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன .

குறிப்பாக திருக்கோவில் கல்வி வலயம் உருவாகியிருக்கிறது. இதிலே முற்றுமுழுதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விட மாற்று கொள்கை கொண்ட கட்சியினரின் முயற்சியாலே சாத்தியமானது என்பது நிதர்சனமானது.

ஏலவே இந்த நல்லாட்சியில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தமிழர்களை வழிநடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறிழைத்துவிட்டது.

குறிப்பாக கிழக்கு மாகாண சபை ஆட்சியமைக்கும் போது நிச்சயமாக தமிழர்கள் முஸ்லிம்களோடு சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்க கூடாது. முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் வந்த பின்னர் அவர் சமூகம் சார்ந்த்த விடயங்களில் கூடுதல் அக்கறை காட்டியிருக்கிறார்.

குறிப்பாக உள்ளூராட்சி திணைக்களம் , கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் அனைத்தையும் தங்கள் கைவசம் எடுத்து இன ரீதியான விகிதாசாரத்தை புறம்தள்ளிவிட்டு தங்களுடைய சமூகத்திற்கே அனைத்துவிதமான பணிகளையும் செய்கின்றனர்.

ஆனால் இங்கு இருக்கின்ற அரசு பக்கம் தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களோ, பேரினவாத சக்திகளுக்கு கால காலமாக துணை நிற்கின்ற பிள்ளையான், கருணா போன்றோரும் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ இது சம்பந்தமாக மீண்டும் மீண்டும் பிற்போக்கு தனமாகவே செயற்பட்டு முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு வழிவிட்டு தள்ளி நிற்கின்றனர்.

ஆனால், குறிப்பாக எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கிழக்கை பொறுத்தவரை கடந்த காலங்களை போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துகளை அல்லது அவர்களின் வழிகளால் சென்று அரசியல் பணிகளை முன்னெடுக்க மக்கள் தயாரில்லை என்ற கருத்தை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் எடுத்துரைக்கும்.

தூர நோக்கம் அற்ற செயற்பாடு எம் இனத்தை அழித்து செல்லும் யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு இந்த நான்கரை வருடங்களில் சாதித்தது என்ன ? நாங்கள் வட மாகாணத்தை கிழக்கு மாகாணத்துடன் ஒப்பிட முடியாது.

கிழக்கில் தினம் தினம் காணி அபகரிப்பு, நிருவாக ரீதியான செயற்பாடுகள் ,அரசியல் ரீதியான அடக்குமுறைகள் என தமிழர்கள் அழிந்த்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பற்றி சிந்திக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நடந்துகொண்ட விதமும் தங்களுடைய அரசியல் பிரமுகர்களிடம் ஒற்றுமையில்லாத சூழலும் தமிழ் மக்கள் மாற்று கட்சியை அல்லது மாற்று கொள்கையாளர்களிடம் செல்ல வழி வகுத்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் அதற்கு முழு பொறுப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும். வட கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தரப்பிடமோ, முஸ்லிம் தரப்பிடுமோ அல்லது வட கிழக்கு இணைப்பை முழுவீச்சுடன் நடாத்தி முடித்த இந்தியாவிடமிருந்தும் கை நழுவி காவி துறவிகளிடம் சென்றுவிட்டது . இனி வட கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமான விடயமல்ல என்பதை முதிர்ந்த தலைமைகளுகும் புரியாமலுமில்லை.

இனி வரும் தேர்தல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முகம்கொடுக்க வேண்டுமெனில் மாற்று வழிகளை கையாள வேண்டும். கடந்த காலங்களிலே சகல வசதிகளையும் ஆண்டு அனுபவித்தவர்கள் அவர்களின் அடிமைகளாக தமிழர்களை வைத்து கொள்ள விரும்புகிறார்கள். அந்த அடிமைத்தனத்திற்கு இன்னும் தமிழர்கள் இசைந்து போக தயாரில்லை.

கிழக்கு மாகாணத்திலே எங்களுக்கென்று ஓர் அதிகாரம் தலைமைத்துவம் என்ற அடிப்படையில் தமிழர்கள் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் அதிகமானவர்களிடையே உருவாகிக்கொண்டிருக்கிறது. நாங்கள் அடிப்படையை வைத்துகொண்டு பேசி பேசி பிற்போக்குதனமாக செயற்பட முடியாது. மாற்று சிந்தனைகொண்டு கிழக்கு தமிழர்களை காப்பாற்றகூடிய பொறிமுறைகளை வகுக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

தமிழ் , முஸ்லிம் உறவை பற்றி பேசுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிந்தால் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி காட்டட்டும். அரசை எதிரணியிலிருந்து தட்டி கேட்க தமிழ் தேசிய தலைமைகள் இருக்கின்றது.

நல்லாட்சியை கொண்டுவந்த தமிழ் தேசிய தலைமைகள் நிலைத்திருந்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த பல்வேறு சந்தர்பங்கள் கிடைத்தும் தவறவிட்டுள்ளன. சிங்கள பேரினவாத சக்திகளை நம்பி கல்முனை போராட்டத்தை கைவிட்ட தமிழ் தலைமைகளுக்கு நீராவியடியில் புத்தரும் தலைகுனிய செய்தனர்.

பெளத்த தலைமைகள் இன்று மெதுவாக தங்களின் சுய ரூபத்தை காட்டி முள்ளிவாய்க்காலை தமிழருக்கு நினைவு கூருகின்றனர்.

இதன் தார்ப்பரியம் தமிழர்களும் புரியாமலுமில்லை. சிங்கள பேரினவாத பெளத்த துறவிகள் பொதுஜன பெரமுன கட்சியை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என அதிகார தொனியில் அதட்டுவதும் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று. இவர்களே அன்று ஒரு மாத காலத்திற்குள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கபடும் என்று வாக்குறுதிகளை வழங்கி சென்றிருந்தனர். அதுவும் கானல்

நீராய் மாறியதும் வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. முஸ்லிம் அரசியல் தலைமகளுக்கு எதிரணி அரசியல் பழக்கப்படாத ஒன்று. அவர்கள் தங்கள் இனம், மதம் , கலாச்சார விடயங்களை பாதுகாத்து கொள்ள ஆட்சியமைக்கும் தரப்பினரை சார்ந்துகொள்வது அது சமூக நலன் சார்ந்தது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தாவியே தீருவார்கள் றிஷாட்,ஹிஸ்புல்லா போன்றவர்கள் என்பது அரசியல் விமர்சகர்களின் அனுமானம். தமிழர்கள் ஏமாற்றப்படுவது புதிதல்ல ஏமாறும் விதம்தான் புதிது.