தமிழரசுகட்சியை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தை முற்றுகையிட்டு காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது குறித்த கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெறும் பகுதிக்குள் நுழைய முற் பட்டபோதிலும் அதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக கூட்டம் இடம்பெறும் இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், "சம்பந்தா 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு நீங்கள் உறுதியளித்தீர்கள். இப்போது ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொன்னீர்கள்?" ,

"சம்பந்தா தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்த தகுதியற்றவர்கள் சுமந்திரனே பாராளுமன்றத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்?" ,

"சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா? " போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் கோசங்களை எழுப்பியிருந்தனர்.