மக்களின் இடங்களை அமெரிக்காவிற்கு வழங்கும் எம். சீ. சீ ஒப்பந்தத்தை இரத்துச் செய்யகோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

மிலேனியம் சலேன்ஞ் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி திருகோணமலை மக்கள் சக்தி அமைப்பினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை ஜனதா பலய அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மக்கள் சக்தி அமைப்பினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் கருத்துத் தெரிவித்த மக்கள் சக்தி அமைப்பினர்,

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள இந்த மிலேனியம் சலேன்ஞ் ஒப்பந்தம் திருகோணமலை மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

திருகோணமலையில் காணப்படுகின்ற அனைத்து காணிகளும் பொது மக்களுக்குச் சொந்தமானவை இவைகளுக்குரிய உரிமப் பத்திரங்களை மக்களுக்கு வழங்காமல் இன்னும் மக்களை இன்னல்களுக்கு ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகளை வெளியிடுகின்றோம்.

இதேவேளை அமெரிக்கா இலங்கைக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு இலங்கையின் வளங்களை சூறையாடுவதற்கு தயாராகி வருகிறது. அத்துடன் இலங்கையின் இயற்கை வளங்களில் ஒன்றான திருகோணமலை துறைமுகம் அனைத்து வளங்களையும் கொண்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை முன்னெடுத்து வருவதுடன் 6000 காணிகள் பறிபோகும் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாங்கள் இடமளிக்க போவதில்லை எனவும் இந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.