மாவீரர் இல்ல சிரமதான பணிகளில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர்

Report Print Varunan in சமூகம்

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.

மாவீர் தினத்தை முன்னிட்டு இன்று காலை அம்பாறை, கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் இல்லத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாவீரரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அவர்களை கைது செய்யப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை முன்னிட்டு சிரமதானப் பணிகள் தமிழர் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை கஞ்சிகுடிச்சாறு ,மட்டக்களப்பு , மாவடி முன்மாரி, தாண்டியடி ,வாகரை, கண்டலடி, திருமலை, ஆலங்குளம்,செம்மலை உள்ளிட்ட 7 மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கபடும் நாகமணி கிருஷ்ணபிள்ளை கூறுகையில்,

கார்த்திகை 27 தாயக விடுதலைக்கான ஆகுதியான மாவீர செல்வங்களை நினைவுகூரும் முகமாக இவ் முன்னேற்பாடுகள் இவ் வருடமும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க இருப்பதனால் இன்று சிரமதான பணிகளை முன்கொண்டு செல்கிறோம். ஆனால் இராணுவ தரப்பு அங்கு வந்து சிரமதான பணிகளை இடை நிறுத்த கோரியதாகவும் இல்லையேல் கைது செய்து கொண்டு செல்ல நேரிடும் என அச்சுறுத்தி சென்றனர்.

அதன் பின்னர் இரண்டாவது தடவையாக அதே இராணுவத்தினர் சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் புகைப்படம் எடுக்க வேண்டும், அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரினர். இதனை மறுத்த பின்னர் இவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னர் அட்டையை புகைப்படம் எடுத்த பின்னர் அங்கிருந்து அகன்று சென்றனர்,என்று தெரிவித்தார்.

தமிழர் தாயக பிரதேசங்களில் கார்திகை 27 புனித நாளாகவும் அன்று மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என சர்வதேசமும் , இலங்கை அரசும் அனுமதியளித்த பின்னரும் இராணுவமும் , புலனாய்வு பிரிவும் தடுப்பதேன் என அங்கு இருந்த மாவீரர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கவலை வெளியிட்டுள்ளனர்.