சஜித்தை ஆதரிப்பதற்கு 30 கோடி ரூபா பெற்ற கூட்டமைப்பு எம்.பிக்கள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Report Print Theesan in சமூகம்
257Shares

ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993வது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேற்படி தெரிவித்தனர்.

மேலும் தெரிவித்த அவர்கள்,

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன் ஓட்டு கேட்டுவருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது.

மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களின் அரசியல் விருப்பத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சர்வதேசத்துக்கு காட்ட தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா தமிழர்களின் விருப்பத்தை தீர்க்கவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

கோத்தபாயவும், சஜித்தும் சமஸ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான சிங்கள பௌத்த அடிப்படை வாதிகள் என அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தின்போது, தமிழர்களிற்கு எச்சரிக்கை, தந்தையின் மரணத்திற்கு தமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித், சஜித்தை ஆதரிப்பதற்கு தலா 30 கோடி ரூபா கூட்டமைப்பு எம்பிக்கள் பெற்றுள்ளார்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாங்கியிருந்தனர்.

Latest Offers