யாழ்.பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

யாழ்.பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்கள் , மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் அதிகளவான நுளம்பு பெருக்கம் காரணமாக பல மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி அவர்களிடம் வினவியபோது,

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிகளவான மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியமை தொடர்பாக கடந்த வாரம் சுகாதார உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது இரு மாணவர்கள் மாத்திரமே டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து இருந்தனர் என்றும் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் வினாவியபோது,

பல்கலைக்கழகத்தில் இருந்து 20 திற்கு மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைகளை பெற்று வருகின்றனர் என்று கூறியதுடன், யாழ் மாவட்டத்திலே இவ்வருடம் மாத்திரம் 1991 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி உள்ளனர்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 456 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர் என்றும் கூறியதுடன் கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 276 பேர் டெங்குகாய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

நல்லூர் ,கோப்பாய், யாழ் மாநகர சபை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகளவு டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.