கிளிநொச்சியில் கிராமசேவகரின் குடும்பத்தினர் மீது வாள்வெட்டு தாக்குதல்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தபகுதியில் நேற்று இரவு 11 அடையாளம்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த கிராம சேவையாளரால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிரான நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் அநாமதேயமாக சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் நடமாடியுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் குறித்த குழுவினர் கிராம சேவகரின் வீட்டுற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கிராம சேவையாளர் கடந்த மாதமும் அடையாளம்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருந்தார். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு குறித்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில்கடமையாற்றிய கிராமசேவையாளர் அச்சம் காரணமாக வேறு இடத்தில் கடமைகளை செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேர்மையான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளிற்கு தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகின்றது என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.