வீதி ஒழுங்கு விடயத்தில் பொலிஸார் அசமந்தம்! வவுனியா நகரசபையில் குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அரச, தனியார் பேருந்துகள் முதன்மை வீதிகளில் தரித்து நின்று சேவையில் ஈடுபடுவதால் வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்பாக வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் கௌதமன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது உறுப்பினர் சு.காண்டீபன் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவியின் மரணம் அனைவரையும் சோகமயமாக்கியிருந்தது. இதுபோல கோர விபத்து இனி வரும் நாட்களில் இடம்பெறக்கூடாது.

தற்போது தனியார், அரச பேருந்துகள் இலுப்பையடி பகுதியில் நீண்ட நேரம் தரித்து நின்று ஒரு நெருக்கடி நிலையை உருவாக்குகிறது. அது போல பள்ளிவாசலிற்கு அருகாமையிலும் இதே நிலை உள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் விபத்துக்கள் இடம்பெறுவதுடன், வாகன நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது.

குறித்த பகுதிகளில் தரித்து நின்று உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளை பழைய பேருந்து நிலைய பகுதிக்கு இடமாற்றுமாறு ஆளுநரிடம் கேட்டிருந்தோம் அவரது அசமந்த போக்கான பதில்கள் எம்மை கவலையடைய செய்திருந்தது.

வாகன நெருக்கடியால் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை கடப்பதற்கு பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.

எனவே பாடசாலை ஆரம்பித்து, முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்கள் நகரிற்குள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் ஊடாக நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தவிசாளர் பதிலளிக்கையில்,

பேருந்து நிலைய விடயத்தில் ஆளுநருடனான சந்திப்பின் போது அவர் அளித்த பதில்கள், உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரது பதில்கள் அக்கறையற்று இருந்தது.

எம்மை கையாண்ட விதங்கள் எவளவு மோசமாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்திருந்திருப்பீர்கள். வவுனியாவில் உத்தியோகபூர்வமற்ற 5 பேருந்து தரிப்பிடங்கள் அமைந்துள்ளது.

அரச, தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையிலான பிரச்சினை காரணமாக உள்ளூர் சேவைகளை பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொள்வதில் இணக்கப்பாட்டை காணமுடியாமல் இருக்கிறது.

அத்துடன் வவவுனியா வைத்தியசாலைக்கு முன்பும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் நிலை உருவாகின்றது இவை தொடர்பாக பொலிஸாரிற்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொலிஸாருடனான கூட்டங்களின் போது அவர்கள் உறுதிமொழிகள் தந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை.

பேருந்து தரப்பினர்களோடு கதைத்தால் அவர்கள் தமது பிரச்சனைகளையே முன்னிறுத்துகின்றனர். பொது பிரச்சினையை பார்கிறார்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஏனைய உறுப்பினர்களால் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதினை கட்டுப்படுத்துவதாகவும் சபை தீர்மானம் எடுத்துள்ளது.