கௌதாரிமுனை மண் அகழ்வு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்

பூநகரி - கௌதாரி முனையில் சட்டவிரோதமாக மண் அகழ்வினை மேற்கொண்டு வருவபவர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கினை சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான கலந்துரையாடல் கௌதாரி முனையில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த சட்டவிரோத மண் அகழ்வினால் பிரதேச மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளால் எதிர்காலத்தில் குறித்த கிராமங்கள் இல்லாமல் போக செய்யப்படும் அபாயம் இருப்பதாக கூறி குறித்த கிராம மக்கள் கைக்குழந்தையோடு இரவு பகலாக போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இவற்றை கருத்தில் கொண்டு பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை எண் இணைக்கப்பட்டு சட்டவிரோதமாக மண் அகழ்வோர் உடனடியாக மண் அகழ்வினை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர் பொது அமைப்புக்களுக்கு எதிராக சட்ட விரோத மண் அகழ்வோரினால் வழக்கு தொடுக்கப்பட்டது.

குறித்த வழக்கின் சில தவணைகள் நடைபெற்றுள்ள நிலையில் தொடரும் வழக்குகளை இனி எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடலே இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இடம் பெறுவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்யப்படும் இடங்களை பார்வையிட்டனர் அதன் பின்னர் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தர்மத்திற்கமைவாகவும் நீதியின் வழியிலும் நின்று அமைதியாக இந்த வழக்கினை கையாண்டு கனியவளத்தினையும் இயற்கயையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் பூபால் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.