புத்தளம் பகுதியில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Report Print Ashik in சமூகம்

புத்தளம் பகுதியில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் மன்னாருக்கு சென்று வாக்களிப்பதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் போக்குவரத்து பணிகளுக்காக 120 தனியார் பேருந்துக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மன்னார் தேர்தல் திணைக்களத்தில் முறையீடு செய்துள்ளதாக மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் பலர் புத்தளம் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியிலேயே வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இருந்து அவர்கள் மன்னாருக்குச் சென்று வாக்களிக்க வேண்டியுள்ள நிலையில் இந்த போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போன்று இம்முறை இங்கு வாக்களிக்க வருவதற்கு தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், ஆனால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளிலேயே தங்கள் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறு புத்தளத்திலிருந்து வாக்காளர்கள் தனியார் பேருந்து மூலம் மன்னாருக்கு வந்து வாக்களிக்க வேண்டுமென விரும்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இவர்கள் மன்னாருக்கு வந்து வாக்களிக்க வருவதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் தனியார் வாகனத்தில் மன்னாருக்கு வருகை தரும் பொழுது தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வேட்பாளர்களின் விளம்பரம் போன்றவைகள் கண்டுப்பிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களை அழைத்து வரும் பேருந்துகள் வாக்கு சாவடிகளிலிருந்து 500 மீற்றர் தூரத்திலே நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் புத்தளத்திலிருந்து வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்து வருவதற்காக தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதைக் கண்டித்து சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சி தனது ஆட்சேபனையும் மன்னார் தேர்தல் முறைப்பாடு அலுவலகத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முறைப்பாடு விண்ணப்பத்தை மன்னார் தேர்தல் திணைக்களம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.