பொதுமக்களுக்கு இடையூறு செய்தவருக்கு நேர்ந்த கதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ்ப்பாணத்தில் கழிவு நீரை வீதிக்கு விட்ட நபருக்கெதிராக யாழ்.மாநகர சபையால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக் கழிவு நீரை பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வீதிக்கு விட்டமையினால் அந்த வீதியூடாக போக்குவரத்து செய்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

மேலும் இவ்வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் அப்பகுதியில் டெங்கு அபாய அறிகுறிகள் காணப்படுவதுடன், வீதியும் பயன்படுத்த முடியாதுள்ளதாக பொதுமக்களால் மாநகரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மாநகர சுகாதாரப் பிரிவினால் அந்த வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ் விடயம் இன்று மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், முதல்வர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று விடயங்களை ஆராய்ந்தார். இவ்விடயம் தொடர்பில் உரிய வீட்டு உரிமையாளருக்கு மாநகர சட்ட விதிமுறைகள் குறித்து முதல்வரால் விளக்கப்பட்டதுடன் உரிய முறையில் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளும்படியும் குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பான பொதுமக்களின் முறைப்பாட்டிற்கமைய மேலதிக சட்ட நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் இந் நேரடிக் களவிஜயத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பாளர், யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர், சுகாதார மேற்பார்வையாளர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.